புதுடில்லி: வங்கதேச பிரதமராக பதவியேற்றுக் கொண்ட தாரிக் ரஹ்மான், இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த வங்கதேச பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து முன்னாள் பிரதமர் கலிதா ஜீயாவின் மகன் தாரிக் ரஹ்மான் இன்று வங்கதேசத்தின் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்த விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கலந்து கொண்டார்.
இந்நிலையில் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி எழுதி உள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்த சந்தர்பத்தில் நீங்கள் , உங்கள் மனைவி ஜூலைதா ரஹ்மான், மகளுடன் இந்தியா வருமாறு அழைப்பு விடுக்கிறேன். உங்களுக்கு சவுகரியமான நேரத்தில் இந்தியா வர வேண்டும். உங்களுக்கு சிறப்பான வரவேற்பு காத்திருக்கிறது. எங்களின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களின் ஆரோக்கியத்திற்கும், வங்கதேச மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ள உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வங்கதேச மக்கள் உங்கள் தலைமையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், நாட்டை அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புப் பாதையில் முன்னோக்கி அழைத்து செல்வதற்கான உங்களின் தொலைநோக்கு பார்வைக்கு அளித்த உத்தரவுக்கு ஒரு சான்று. இவ்வாறு அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
