நவி மும்பை: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் அசத்திய இந்திய அணி 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, இலங்கையில், ‘டி-20’ உலக கோப்பை 10வது சீசன் (பிப். 7 – மார்ச் 8) நடக்கவுள்ளது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ‘நடப்பு உலக சாம்பியன்’ இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு இஷான் கிஷான், அபிஷேக் சர்மா ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. நிகிடி வீசிய முதல் ஓவரில் 2 சிக்சர் விளாசினார் இஷான். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த அபிஷேக், கார்பின் போஷ் வீசிய 4வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டினார். நோர்க்கியா வீசிய 5வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த இஷான், மபாகா பந்தை சிக்சருக்கு அனுப்பி, 23 பந்தில் அரைசதம் கடந்தார். இஷான் (53 ரன், 20 பந்து, 7×6, 2×4), அபிஷேக் (24) ‘ரிட்டயர்டு அவுட்’ ஆகினர்.
திலக் வர்மா (45), சூர்யகுமார் (30), ஹர்திக் பாண்ட்யா (30) ஓரளவு கைகொடுத்தனர்.
இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 240 ரன் எடுத்தது. அக்சர் (35) அவுட்டாகாமல் இருந்தார்.
மார்க்ரம் ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஜார்ஜ் லிண்டே (0) ஏமாற்றினார். கேப்டன் மார்க்ரம் (38), ரியான் ரிக்கிள்டன் (44) ஆறுதல் தந்தனர். பிரவிஸ் (2), டேவிட் மிட்டர் (13) சோபிக்கவில்லை. ஜேசன் ஸ்மித் (35), மார்கோ யான்சென் (31) ஓரளவு கைகொடுத்தனர்.
தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (45), போஷ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அபிஷேக் சர்மா 2 விக்கெட் கைப்பற்றினார்.
வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
பெங்களூருவில் நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில் ஏமாற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி (159/7), 23 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் (182/6) தோல்வியடைந்தது.
* மற்றொரு போட்டியில் நமீபியா அணி (226/4) 6 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை (220/5) வென்றது.
