இந்திய அணி கோல் மழை * தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில்…

பொக்ஹாரா: தெற்காசிய கால்பந்தின் பைனலுக்கு இந்தியாவின் இளம் பெண்கள் அணி முன்னேறியது. நேற்று 8-0 என பூடானை வீழ்த்தியது.

நேபாளத்தில் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 2 முறை சாம்பியன் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என நான்கு அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்திய இந்தியா, அடுத்து வங்கதேசத்திடம் தோற்றது.

நேற்று தனது மூன்றாவது, கடைசி போட்டியில் பூடானை எதிர்கொண்டது. இந்திய அணிக்கு 6வது நிமிடம் அலிஷா, 10 வது நிமிடம் அபிஷ்டா தலா ஒரு கோல் அடித்தனர். திவ்யானி 17 வது நிமிடம் ஒரு கோல் அடித்தார். இந்தியாவின் பியர்ல், 16, 38 வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து அசத்திய இவர், 40 வது நிமிடம் மீண்டும் அசத்த, ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். மற்றொரு வீராங்கனை பிரித்திகா, 25, 89 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முடிவில் இந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

3 போட்டியில் 2ல் வென்ற இந்தியா (1 தோல்வி), 6 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது. இதில் மீண்டும் வங்கதேசத்தை (பிப். 7) சந்திக்க உள்ளது.

Source link