புதுடில்லி: இந்திய- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்றுமதி அதிகரிக்கும். இதனால் நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா -அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மூலம் நமது ஏற்றுமதியாளர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சந்தை வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பு நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை 18% ஆகக் குறைக்கும். இது உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் ஜவுளி மற்றும் ஆடை, தோல் மற்றும் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள், கரிம ரசாயனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் துறைகளில் ஒரு பெரிய சந்தை வாய்ப்பை வழங்கும். கூடுதலாக, பொதுவான மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் வைரங்கள், மற்றும் விமான பாகங்கள் உள்ளிட்டவற்றிக்கு வரிகள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மேலும் மேம்படுத்தப்படும்.
இந்த ஒப்பந்தம் மக்காச்சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழிப்பண்ணை, பால், பாலாடைக்கட்டி, எத்தனால் (எரிபொருள்), புகையிலை பொருட்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், கிராமப்புற வாழ்வாதாரங்களுக்காகவும் இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவு வலுப்பெறும். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் இது நமது மக்களுக்கும் வணிகங்களுக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும். இவ்வாறு பியுஷ் கோயல் கூறியுள்ளார்.
