இந்திய உணவு பொருட்களுக்கு மாற்று சந்தையாகும் ஆஸ்திரேலியா

புதுடில்லி, மேற்காசியாவில் நீடித்து வரும் போர் காரணமாக துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ள இந்தியாவின் அழுகக்கூடிய உணவு பொருட்களுக்கு, ஆஸ்திரேலியா ஒரு மாற்று சந்தையாக உருவெடுக்க முடியும் என்று, தெற்கு ஆசியாவுக்கான அந்நாட்டு வர்த்தக ஆணையர் டாட் மில்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று கூறியதாவது:

இந்திய அழுகும் பொருட்களுக்கு ஆஸ்திரேலியா நிச்சயம் ஒரு மாற்று சந்தையாக இருக்க முடியும். தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயாராகவே உள்ளோம்.

ஆனால், இரு நாடுகளுக்கு இடையே உள்ள துாரம், போக்குவரத்து செலவு ஆகியவை மிக பெரிய சவாலாக இருக்கும். சரக்குகளை ஆஸ்திரேலியாவின் எந்த துறைமுகத்துக்கு அனுப்புவது என்பதும் ஒரு பிரச்னையாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வர்த்தகம் அதிகரிப்பு இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு, இரு தரப்பு வர்த்தகம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 2020 – 21ம் நிதி ஆண்டில் கிட்டத்தட்ட 1.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வர்த்தகம், 2023 – 24ம் நிதி ஆண்டில் கிட்டத்தட்ட 22.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், அரிசி ஏற்றுமதி கிட்டத்தட்ட 560 கோடி ரூபாயில் இருந்து கிட்டத்தட்ட 760 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் ஏற்றுமதி கிட்டத்தட்ட 215 கோடி ரூபாயில் இருந்து கிட்டத்தட்ட 520 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பேக்கரி பொருட்கள் ஏற்றுமதி 113 கோடி ரூபாயில் இருந்து 159 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Source link