இந்திய கால்பந்து அணி அறிவிப்பு * ஆசிய தகுதிச்சுற்றில் பங்கேற்க…

புதுடில்லி: ஆசிய கோப்பை கால்பந்து தொடர் தகுதிச்சுற்றில் பங்கேற்கும் இந்தியாவின் 23 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 19 வது சீசன் வரும் 2027, ஜன. 7-பிப். 5ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 141 வது இடத்திலுள்ள இந்திய அணி ‘சி’ பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

முதல் 5 போட்டியில் இந்திய அணி 2 ‘டிரா’, 3 தோல்வியுடன், பட்டியலில் கடைசி இடம் (2 புள்ளி) பெற்று, ஆசிய கோப்பை தகுதி வாய்ப்பை இழந்தது. தற்போது, மார்ச் 31ல் நடக்கவுள்ள தகுதிச்சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி, மீண்டும் ஹாங்காங்கை (153 வது இடம்) சந்திக்கிறது. இரு அணிகள் முதலில் மோதிய போட்டி இந்தியா 0-1 என அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

இதற்கான 23 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் (1993) பிறந்த ரியான் வில்லியம்ஸ் 31, முதன் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரது அம்மா மும்பையை சேர்ந்தவர். இதற்கு ‘பிபா’ அனுமதி வழங்கியது.

இதையடுத்து அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய அணியில் இடம் பெற்ற இரண்டாவது வீரர் ஆனார் ரியான். முன்னதாக ஜப்பானில் பிறந்த அரட்டா ல்ஜுமி, 2013-14ல் இந்திய அணியில் விளையாடினார்.

தவிர, கோல்கீப்பர்களாக ‘சீனியர்’ குர்பிரீத் சிங் சாந்து, விஷால் கெய்த்துடன், தற்காப்பு வீரர்கள் அன்வர் அலி, ராகுல் பெஹே, சந்தேஷ், முன்கள வீரர்கள் லால்ரிந்திகா, பரூக் சவுத்ரி, சாங்டே ரஹிம் அலி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

Source link