இந்திய பெண்கள் அணி திணறல்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா

பெர்த்: பெர்த் டெஸ்டில் இந்திய பெண்கள் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடுகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் விளையாடுகிறது. பெர்த்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 198 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 96/3 ரன் எடுத்திருந்தது. எல்லிஸ் பெர்ரி (43), அனாபெல் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் எல்லிஸ் பெர்ரி அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய அனாபெல் சதம் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 128 ரன் சேர்த்த போது தீப்தி சர்மா ‘சுழலில்’ பெர்ரி (76) சிக்கினார். பெத் மூனே (19), ஆஷ்லே கார்ட்னர் (1) நிலைக்கவில்லை. தொடர்ந்து அசத்திய தீப்தி பந்தில் அனாபெல் (129) அவுட்டானார். அலானா கிங் (21), லுாசி ஹாமில்டன் (23) ஆறுதல் தந்தனர்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 323 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் சயாலி 4, கிராந்தி, தீப்தி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (2), ஷைபாலி வர்மா (5) ஏமாற்றினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (14), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (11), தீப்தி சர்மா (9) சோபிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 105/6 ரன் எடுத்து, 20 ரன் பின்தங்கி இருந்தது. பிரதிகா (43), ஸ்னே ராணா (14) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் லுாசி ஹாமில்டன் 3, அனாபெல் 2 விக்கெட் சாய்த்தனர்.

Source link