புதுடெல்லி,
3 முறை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் யாதவ் உயிரிழந்துள்ளார்.
யார் இந்த நீரஜ் யாதவ்?
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நீரஜ் யாதவ், சிறு வயதிலேயே போலியோவுக்கு பிந்தைய உடல் பாதிப்புக்கு ஆளானார். இருப்பினும், விளையாட்டின் மீதான ஆர்வத்தை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார்.
கடந்த 2005 முதல் 2012 வரை சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்ட அவர், பின்னர் பாரா தடகளப் போட்டிகளுக்கு மாறினார். 2015-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல் ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று கவனம் பெற்றார்.
3 தங்கப் பதக்கங்கள்
2018-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான எப்55 ஈட்டி எறிதல் பிரிவில் 29.84 மீட்டர் தூரம் எறிந்து நீரஜ் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். அப்போது ஆசிய சாதனையையும் அவர் படைத்தார்.
தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டெறிதல் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தனது தங்கப் பதக்க எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தினார்.
ஊக்கமருந்து
நீரஜ் யாதவின் விளையாட்டு வாழ்க்கையில் ஊக்கமருந்து தொடர்பான விவகாரம் பின்னடைவை ஏற்படுத்தியது. 2023-ஆம் ஆண்டு பெங்களூருவில் எடுக்கப்பட்ட மாதிரியில் தடைசெய்யப்பட்ட ஸ்டானோசோலோல் என்ற பொருள் இருந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அவரை தற்காலிகமாகப் போட்டிகளில் பங்கேற்க தடை செய்தது.
இந்த இடைநீக்கம் காரணமாக, 2026-ஆம் ஆண்டு ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
விசாரணை
நீரஜ் யாதவ் உயிரிழந்த சம்பவம் இந்திய பாரா விளையாட்டுத் துறையில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உடற்கூறாய்வு உள்ளிட்ட நடைமுறைகள் மூலம் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
