சென்னை: “சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் தனது மகளிடம், அவர் தனது பள்ளியில் தொடக்க நிலை மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்று மொழியாகக் கற்பிக்கத் தொடங்கியுள்ளாரா என்பதை முதல்வர் ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்” என 6 ஆம் வகுப்பு முதல் மும்மொழிகள் கட்டாயமாக்கும் விவகாரத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்திய அரசின் நோக்கங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு விஷயத்தைப் பற்றிப் புகார் கூறுவது மு.க.ஸ்டாலினின் வாடிக்கை. 2026-27 கல்வியாண்டிற்காக வெளியிடப்பட்ட சிபிஎஸ்இ-யின் பாடத்திட்டத்தின் (பகுதி-1) படி, 6 ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு இந்தியாவின் தாய்மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
