இந்துார்: மத்திய பிரதேசத்தின் இந்துார் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், காங்கிரசைச் சேர்ந்த இரண்டு பெண் முஸ்லிம் கவுன்சிலர்கள், ‘வந்தே மாதரம்’ பாடலை பாட மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில தலைநகர் இந்துாரில் நேற்று முன்தினம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது.
அவமதிப்பு
அப்போது, காங்கிரசைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் பவுஜியா ஷேக் அலீம் மற்றும் ருபினா இக்பால் ஆகியோர் வந்தே மாதரம் பாடலை பாடும்போது பங்கேற்க மறுத்தனர்.
இதைப் பார்த்த பா.ஜ., கவுன்சிலர்கள், ‘இது, தேசிய உணர்வுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு’ எனக்கூறி, இரண்டு காங்கிரஸ் முஸ்லிம் கவுன்சிலர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால், மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அலீம், ருபினா ஆகிய இரண்டு காங்., கவுன்சிலர்களையும் வெளியேறும்படி மாநகராட்சி தலைவர் கேட்டுக்கொண்டார்.
வெளியேற்றம்
இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் இருந்து அவர்கள் இருவரும் வெளியேறினர். அப்போது செய்தியாளர்களிடம் ருபினா கூறியதாவது:
நாங்கள் யாருடைய மிரட்டலுக்கும் பணியமாட்டோம். எங்கள் இஸ்லாமிய நம்பிக்கையில், வந்தே மாதரம் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எங்கள் மதத்தின் புனித நுாலான குரானில், அல்லா மட்டுமே உயர்ந்தவர்.
வந்தே என்றால் வழிபடுதல் என்றும் மாதரம் என்றால் தாய் என்றும் பொருள். நாங்கள் அல்லாவை மட்டுமே வழிபடுகிறோம். அப்படி இருக்க, வேறு யாரை நாங்கள் வழிபட வேண்டும்?
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு உறுப்பினர் அலீம் கூறுகையில், “நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேசிய கீதத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், வந்தே மாதரம் பாடலை பாடும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது,” என்றார்.
நாடகம்
இதற்கு, காங்., செய்தித்தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறுகையில், “தேசிய கடமையை நிறைவேற்ற இயலாதவர்கள், வந்தே மாதரம் பாடலை பாட இயலாதவர்கள் நரகத்திற்கு போகலாம்; அவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று குடியேறட்டும்.
“அவர்களது இந்த அரசியல் மிரட்டல், பா.ஜ.,வுடன் இணைந்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம். இவர்களுக்கு வெறும் நோட்டீஸ் மட்டும் அனுப்பாதீர்கள்; அவரை கட்சியில் இருந்து வெளியேற்றுங்கள்,” என்றார்.
