கடந்த 17ஆம் தேதி ஆணிவாரா ஆஸ்தான நாளன்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் திருப்பதி கோவிலில் ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்களை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சார்பாக சமர்ப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோவில் முன் வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று பட்டு வஸ்திர சமர்ப்பணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், சாமி கும்பிடவும் அமைச்சர் ரமேஷ் உட்பட 10 பேருக்கு மட்டும் புரோட்டோகால் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் விஐபி பாஸ் வழங்கி இருந்தது.
ஆனால் ராஜா ரெட்டி என்பவர் எனக்கும் இந்த நிகழ்ச்சியில் புரோட்டகால் அனுமதி உள்ளது என்று கூறி ஏழுமலையான் கோவிலுக்குள் சென்று இருக்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அதிகாரிகள், கோவில் அதிகாரிகள் ஆகியோர் அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் ராஜா ரெட்டி நான் செல்ல அனுமதி உள்ளது என்று கூறி உள்ளே சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.
அதன் பின் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் புரோட்டக்கால் அனுமதி யார் யாருக்கு வழங்கப்பட்டது என்று ஆய்வு செய்தபோது அதில் அவருடைய பெயர் இல்லை. எனவே ராஜா ரெட்டியின் அத்துமீறல் பற்றி தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகள் அளித்த புகார் அடிப்படையில் திருமலை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அவரை எந்த அடிப்படையில் அமைச்சருடன் அழைத்து சென்றார்கள் என்றும், அவருக்கு இந்த விஷயத்தில் ஒத்துழைத்தது யார் யார் என்றும் தமிழக அறநிலைத்துறை அதிகாரிகளிடமும் திருமலை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
