திருத்தணி: இந்த தேர்தலில் எல்லா கட்சிகளுக்கும் ஒரே எதிர்க்கட்சி நாங்கள் தான்; என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
திருத்தணி முருகன் கோவிலில் வேலுடன் வந்து சீமான் சாமி தரிசனம் செய்து தமது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
மற்றவர்களுக்கு இது தேர்தல்.. ஆனால் எங்களுக்கு இது போர். நல்ல ஆட்சியை நோக்கித் தான் எனது தேர்தல் பிரசாரம் இருக்கும். உலகத்தின் தலைசிறந்த நாடாக என் நாட்டை நான் மாற்றி படைப்பேன்.
உலகமே திரும்பி பார்க்கிற வகையில் ஒரு நல்ல ஆட்சியை நாங்கள் கொடுப்போம். பூமியின் சொர்க்கமாக நான் எனது தாய்நாட்டை மாற்றுவேன். இன்றிலிருந்து ஏப்.21 வரை எனது பிரசாரம் இருக்கும். இந்த 30 நாட்களும் தொடர்ச்சியாக பிரசாரம் செய்கிறேன்.
எல்லா கட்சிகளுக்கும் ஒரே எதிர்க்கட்சி நாங்கள் தான். ஊழல் இல்லாத ஒரு கட்சியை சொல்லுங்கள். உண்மை, நேர்மையான ஒரு ஆட்சியை சொல்லுங்கள். இலவசம் தராத ஒரு கட்சியை சொல்லுங்கள், ஓட்டுக்கு காசு கொடுக்காத ஒரு கட்சியை சொல்லுங்கள்.
அப்படி என்றால் எல்லா கட்சிகளும் ஒருபக்கம் இருக்கின்றன, அதற்கு எதிர்புறம் நான் இருக்கிறேன். இலவசம் என்பது ஒரு ஏமாற்று, லஞ்சம். எதையாவது கொடுத்து என் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். நான் அதிலிருந்து மாற்ற நினைக்கிறேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.
