இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி

சென்னை: தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் மகளிருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கி வருகிறது. தேர்தலை முன்னிட்டு அடுத்த 3 மாதத்துக்கு சேர்த்து 3 ஆயிரம் ரூபாய், கோடைகால சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் என 5 ஆயிரம் ரூபாய், உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அவர் கூறும்போது, 2026 தேர்தல் உஷ்ணம் அதிகரித்துவிட்டதால் கோடைகாலத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளீர்கள். இரவோடு இரவாக தொகை வரவு வைப்பது தேர்தல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் பேசுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் வருகிறது. தேர்தலை மையமாக வைத்து வழங்கி உள்ளீர்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் எதிர்க்க மாட்டார்கள். பிறகு முன்கூட்டியே ஏன் கொடுத்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலு,‘ கோடை காலம் வருகிறது. மக்களுக்கு மருத்துவ செலவு வரலாம் என்பதால் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது,’ என்றார்.

தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது: கருணாநிதி ஆட்சியில் இலவச டிவி வழங்கிய போதும் அதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இனி எல்லா ஆண்டும் கோடை காலத்தில் மகளிருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பாஜவை சேர்ந்தவர் மகளிர் உரிமைத்தொகைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சூழ்ச்சியை முறியடித்துள்ளோம். இனி எல்லா கோடைகாலமும் மகளிருக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link