இனி, உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யலாம் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு

புதுடில்லி:எப்.டி.ஏ., எனப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு, இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இறக்குமதி வரி பட்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இதுவரை ‘தாராள இறக்குமதி’க்கு உரியவை என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இனி அவை ‘கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை’ என்ற பட்டியலுக்கு மாற்றப்படுகின்றன.

இது தவிர, வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்திடம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே நகைகளை இறக்குமதி செய்ய முடியும். இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி ஒப்பந்தங்களுக்கும், திரும்ப பெற முடியாத வங்கி உத்தரவாத கடிதங்களுக்கும் இது பொருந்தும். ஒப்பந்தங்களின் கீழ் முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டிருந்தாலும், சரக்கு பரிமாற்றம் எந்த நிலையில் இருந்தாலும் இந்த கட்டுப்பாடு செல்லுபடியாகும்.

ரத்தின, நகை ஏற்றுமதி திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நகைகளுக்கும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எப்.டி.ஏ.,வில் என்ன பிரச்னை?
ஆசிய நாடுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்றவற்றுடன் நம் நாடு மேற்கொண்டுள்ள தடையற்ற ஒப்பந்தத்தின் கீழ், நகைகளின் இறக்குமதிக்கு பூஜ்ஜியம் அல்லது மிக குறைந்த வரி விதிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, வர்த்தகர்கள் தங்கம், வெள்ளி, பிளாட்டினத்தை நகைகள் அல்லது பதக்கங்களாக குறைந்த வரியில் இறக்குமதி செய்கின்றனர். பின்னர் அவற்றை உருக்கி தங்கம், வெள்ளி, பிளாட்டினம் கட்டிகளாக்கி, சந்தையில் முழு விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதை தடுப்பதற்காகவே, இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

Source link