இனி 'நானோ செகண்டு' வேகத்தில் என்.எஸ்.இ., பங்கு வர்த்தகம்

தேசிய பங்குச்சந்தையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல், பங்குகள் மற்றும் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் ‘நானோ செகண்டு’ வேகத்தில் இயங்கும் என, அதன் மேலாண் இயக்குநர் ஆஷிஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது:

தற்போது கரன்சி டெரிவேட்டிவ்ஸ் பிரிவில் உள்ள அதிவேகத் தொழில்நுட்பம், விரைவில் பங்கு வர்த்தகத்துக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதன் வாயிலாக, பிற நாடுகளின் பங்குச்சந்தைகளை விட 1,000 மடங்கு வேகத்தில் நம் சந்தை இயங்கும். ஒரு வினாடி என்பது 100 கோடி நானோ செகண்டுகளுக்கு சமம். அந்த அளவிற்கு துல்லியமான வேகத்தில் இனி வர்த்தகம் நடக்கும்.

தற்போது ஒரு வினாடிக்கு 50 முதல் 60 லட்சம் ஆர்டர்களைக் கையாளும் திறன் உள்ள நிலையில், புதிய மேம்பாட்டுக்கு பின், இது 10 கோடி ஆர்டர்களாக உயரும். இதனால் விலை ஏற்ற, இறக்கங்கள் உடனுக்குடன் தெரிவதுடன், ரிஸ்க் மேலாண்மையும் எளிதாகும்.

அதிகரிக்கும் வர்த்தக எண்ணிக்கைக்கு ஏற்ப, வர்த்தக நிறுவனங்கள் தங்களது சர்வர்களை பங்குச் சந்தையின் மெயின் சர்வர் அறையிலேயே அல்லது மிக அருகிலேயே வைத்துக்கொள்ளும் தனது ‘கோ-லோகேஷன்’ உள்கட்டமைப்பை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை விரிவுபடுத்த திட்டமிடப் பட்டிருக்கிறது.

இதுமட்டுமின்றி, பங்குகளில் இருந்து கரன்சிக்கு முதலீட்டுத் தொகையை நொடிப்பொழுதில் மாற்றும் வசதி, சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், 10 கிராம் தங்க பியூச்சர்ஸ் மற்றும் மின்சார வர்த்தகத்துக்கான புதிய திட்டங்களும் அறிமுகமாகின்றன.

மேலும், பங்குச்சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்னரே தொழில்நுட்ப ரீதியாக வர்த்தகத்தில் இந்தியா முன்னோடியாகத் திகழ்ந்த நிலையில், இந்தப் புதிய மாற்றம் இந்திய சந்தையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link