இனி பெட்ரோலில் 20% Ethanol கலப்பு: வாகனத்திற்கு சேதம் இல்லை! – விவசாயிகளுக்கு நல்ல பலன் | Detailed

இனி இந்தியாவில் கிடைக்கும் பெட்ரோலில் 20 சதவிகித எத்தனால் கலந்தே கிடைக்கும். இந்த நடைமுறை நேற்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிதாக ஒன்றும் பெட்ரோலில் எத்தனால் கலக்கப் போவதில்லை. ஏற்கெனவே இந்தியாவில் கிடைத்துவந்த பெட்ரோலில் குறிப்பிட்ட அளவு எத்தனால் கலக்கப்பட்டுதான் வந்தது. ஆனால், அது இப்போது 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த எத்தனால் சதவிகித உயர்வால் வாகனங்களுக்கும், வாகனங்களின் திறனுக்கும் ஏதேனும் பிரச்னையா என்கிற கேள்வியை ஆட்டோமொபைல் நிபுணர் மாதவனிடம் முன்வைத்தோம்.

ஆட்டோமொபைல் நிபுணர் மாதவன்

“மேற்கு ஆசியாவில் நடக்கும் போரால், கச்சா எண்ணெய், எல்.பி.ஜி சப்ளைகளில் பெருமளவில் இந்தியா பிரச்னையைச் சந்தித்து வருகிறது.

இதை ஓரளவு சமாளிக்கும் வகைகளில் ஒன்றுதான், பெட்ரோலில் 20 சதவிகித எத்தனாலைக் கலப்பது ஆகும்.

பெட்ரோல் ப்ளஸ் எத்தனால் கலப்பால் வாகனத்திற்கோ, வாகனத்தின் திறனுக்கோ எந்தப் பிரச்னையும் இல்லை. பிரேசிலில் எத்தனால் கலந்த பெட்ரோல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்நிய செலாவணி, விவசாயிகள்

பெட்ரோலில் எத்தனால் கலப்பது எரிபொருள் தட்டுப்பாட்டைத் தாண்டி, வேறு இரண்டு முக்கியமானவற்றிற்கும் உதவுகிறது.

ஒன்று, அந்நிய செலாவணியைக் குறைக்கலாம். அதாவது, கச்சா எண்ணெயை நாம் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும்போது, அமெரிக்க டாலர்களைக் கொடுத்து தான் வாங்குகிறோம்.

இதனால், நம் கையில் இருக்கும் டாலர்கள் வெளியே செல்கின்றன. நமக்கு டாலர்களும் அதிகம் தேவைப்படுகிறது.

இதுவே, பெட்ரோலில் எத்தனாலைக் கலக்கும் போது, குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கலாம். அதனால், இங்கு அந்நிய செலாவணிக் குறைகிறது.

மேலும், கச்சா எண்ணெய்யிற்காக நாம் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதும் ஓரளவு குறைகிறது.

கரும்பு
கரும்பு

மற்றொன்று, எத்தனால் மக்காச் சோளம், அரிசி, கரும்பு ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால், நம் விவசாயிகளிடம் இருந்து இவை அதிகம் வாங்கப்படும். அதனால், பெட்ரோலில் எத்தனால் கலப்பு நமது விவசாயிகளுக்கு பெரிய பலனாக இருக்கும்.

இந்த முடிவை மத்திய அரசு சட்டென எடுத்துவிடவில்லை. பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

20 சதவிகித எத்தனால் கலப்பைத் தாண்டி, வேறு என்னென்ன செய்யலாம் என்கிற நான்கு விஷயங்களை மத்திய அரசிற்கு All India Distillers Association பரிந்துரைத்துள்ளது. அவை…

> பிரேசிலில் 30 சதவிகிதம் எத்தனால் கலந்த எரிபொருள் தான் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், இந்தியாவிலும் 20 – 30 சதவிகிதம் அளவிற்கு பெட்ரோலில் எத்தனாலை அதிகரிக்கலாம்.

> உலகம் முழுவதுமே கார்கள் ஒரே கம்பெனிகளால் தான் தயாரிக்கப்படுகின்றன. அதனால், இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்களை முழுக்க முழுக்க எத்தனாலில் செயல்படும் வாகனத்தைத் தயாரிக்க ஊக்குவிக்க வேண்டும்.

ஏற்கெனவே மாருதி மற்றும் டோயோட்டா நிறுவனம் இதற்கான பிரோட்டோ டைப் கார்களை உருவாக்கி வருகிறது.

பர்னர்
பர்னர்

> எத்தனால் பர்னர்களைத் தயாரிப்பது குறித்து யோசிக்க வேண்டும். இப்போது எல்.பி.ஜி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நேரத்தில், எத்தனால் பர்னர்களைப் பயன்படுத்தலாம்.

மேலும், இவற்றை ஹோட்டல், உணவகங்கள், மருத்துவமனைகள் போன்று எல்.பி.ஜி தேவைப்படும் இடங்களுக்கும் கொடுக்கலாம்.

> டீசலிலும் எத்தனால் கலப்பு குறித்து யோசிக்க வேண்டும். இந்தியாவில் பெட்ரோலை விட, டீசல் தான் மூன்று மடங்கு அதிகமாக விற்கப்படுகின்றது. அதனால், டீசலில் வெறும் 5 சதவிகித எத்தனாலைக் கலந்தாலே, பெருமளவு சேமிப்பு நடக்கும்.

பொருளாதார சுழற்சி

அதிகளவு எத்தனால் பயன்பாடு, இந்திய பொருளாதாரத்திலும் ஒரு சுழற்சியை ஏற்படுத்தும்.

முதலில், விவசாயிகள் அரிசி, மக்காச்சோளம், கரும்பு ஆகியவற்றை பயிர் செய்வார்கள். அதை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி எத்தனாலாக மாற்றுவார்கள்.

இது பெட்ரோலில் கலக்கும் போதும், பர்னராக மாறும் போதும், அவை கிராமப்புறங்களுக்கும் செல்லும். அவர்கள் பயன்படுத்துவார்கள். இது ஒரு சுழற்சி.

ஆனால், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது, எந்தப் பொருளாதார சுழற்சியும் இல்லை.

மொத்தத்தில், பெட்ரோலில் எத்தனாலைக் கலக்கும் போது, அனைவருக்குமே ‘Win – Win’ ”

Source link