இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வகையில், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதற்கடுத்து, 2021 ஆண்டு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த சமயத்தில் கொரோனா பேரிடர் சூழல் நிலவியதால் அப்போது எடுக்க முடியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது. இரண்டு கட்டங்களாக இந்த கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகள் இன்று (01-04-26) தொடங்கியுள்ளது. இதில், வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, டிவி, இருசக்கர வாகனம், கணினி உள்ளிட்ட பொருட்களின் எண்ணிக்கை உள்ளிட்ட 33 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். முதல் கட்டமாக, இன்று முதல் 15 ஆம் தேதி வரை டெல்லி, கோவா, கர்நாடகா, ஒடிசா, சிக்கிம், மிசோரம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளில் சுயவிவர கணக்கெடுப்பு பணி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அடுத்ததாக, ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு நடத்தப்படும். தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் ஜூலை 17ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. முதற்கட்ட பணிகளுக்குப் பிறகு 2027 பிப்ரவரியில் 2ம் கட்ட பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய கணக்கெடுப்பு போலவே, கணக்கெடுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பார்கள். இருப்பினும், இந்த முறை கணக்கெடுப்பிற்கான விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தம் கணக்கெடுப்பை எளிமைப் படுத்துவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசின் சுயகணக்கெடுப்பு இணையதளத்தில் பொதுமக்கள் தாங்களாகவே செல்போன் எண் மற்றும் பிற அடிப்படை விவரங்கள் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முழுமையாகப் பூர்த்தி செய்த உடன், ஒரு தனித்துவமான சுய கணக்கெடுப்பு அடையாள எண் உருவாக்கப்படும். அதனை, கணக்கெடுப்பிற்கு வரும் பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜூலை 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சுயவிவர கணக்கெடுப்பும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது எட்டாவது கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
