இன்று த-.வெ.க., வேட்பாளர் பட்டியல்: சென்னையில் விஜய் வெளியிடுகிறார்

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் களின் பட்டியலை, அக்கட்சி தலைவர் விஜய் இன்று வெளியிடுகிறார்.

புதிதாக உருவான த.வெ.க., முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறது; எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல், 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.

இதற்காக, த.வெ.க., வேட்பாளர்கள் பட்டியல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த 27ம் தேதி வெளியிடப்பட இருந்தது.

ஆனால், தேர்தல் கமிஷனில் முறையாக அனுமதி பெறாததால், கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சி ரத்தானது.

இந்நிலையில், சென்னை யில் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடத்த, தேர்தல் கமிஷனிடம் அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் ஹோட்டலில், த.வெ.க., தலைவர் விஜய் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார்.

இதை தொடர்ந்து, அனைத்து த.வெ.க., வேட்பாளர்களும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது. சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட, விஜய் வேட்பு மனு தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

முதலில், இரண்டு கட்டங் களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவரவர் வசதிக்கேற்ப வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டது. ஆனால், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கிடைக்காததால், தேர்தல் பணிகள் தாமதமாகிக் கொண்டே வருகின்றன.

எனவே, வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மறுநாளே வேட்பு மனுவையும் தாக்கல் செய்து, விறுவிறுவென தேர்தல் பணிகளை துவக்க த.வெ.க., முடிவு செய்துள்ளது.

களமிறங்கிய ‘இன்ப்ளுயன்ஸர்’கள்! த.வெ.க., வேட்பாளர்களை வழி நடத்த, ‘இன்ப்ளுயன் ஸர்’கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் தங்கி, தொகுதி பிரச்னைகள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர். இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது: த.வெ.க.,வின் செல்வாக்கு, ஓட்டு சதவீதம், பலம் மற்றும் பலவீனத்தை அறியவே, கூட்டணி வேண்டாம் என முடிவு செய்தோம். ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பாக பணியாற்றி வருவோருக்கு தான் வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பிரசாரத்தின்போது, தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து வேட்பாளர்கள் பேசுவர். சமூக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் த.வெ.க., மற்றும் வேட்பாளரின் பிரசாரங்களை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வேட்பாளர்களை வழி நடத்தி, பிரசாரங்களுக்கு தயார் செய்ய, சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் இன்ப்ளுயன்ஸர்கள், கேரளா, ஆந்திராவில் இருந்து களம் இறக்க ப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link