சென்னை: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், இன்று சென்னையில் பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், 27 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார். அவர் தலைமையில், மத்திய தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது.
இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.
இக்கூட்டத்திற்கு பின், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள பா.ஜ., வேட்பாளர்களின் பட்டியலை, பீயூஷ் கோயல் வெளியிட உள்ளார். மேலும், தமிழக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையும் வெளியாக உள்ளது.
