இன்றைக்கும் பலரும் புரிந்துகொள்ளாத விஷயமாகத்தான் இருக்கிறது, பணவீக்கம் எனப்படும் விலைவாசி உயர்வு. இதனால் நம் கையில் இருக்கும் பணத்தின் மதிப்பானது மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வருவதை நம்மில் பலரும் புரிந்துகொள்வதில்லை.
இதனால் சாதாரண மக்களை நாம் குறை சொல்ல முடியாது. காரணம், பணவீக்கம் என்பது கேன்சர் கிருமி மாதிரி. அது நம் உடம்பில் இருந்துகொண்டே நமக்கே தெரியாமல் நம்முடைய சத்து அத்தனையும் உறிஞ்சிக் குடித்துவிட்டு, கடைசியில் நம் உயிரை மாய்த்துவிடுவதைப் போல, பணவீக்கம் என்பது நமக்குத் தெரியாமலே நம் பணத்தின் மதிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கிறது. இதனை ஓர் உதாரணத்துடன் பார்த்தால் சட்டெனப் புரியும்.
உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ அரிசி விலை 40 ரூபாய். 100 ரூபாய்க்கு 2.5 கிலோ அரிசியை நீங்கள் வாங்கி இருப்பீர்கள். ஆனால், இன்று ஒரு கிலோ அரிசி 70 ரூபாய் எனில் 100 ரூபாய்க்கு 1.5 கிலோ அரிசியைத்தான் வாங்க முடியும். இன்னும் சில ஆண்டுகளில் ஒரு கிலோ அரிசி விலை 100 ரூபாய் ஆகிவிட்டால், 100 ரூபாய்க்கு 1 கிலோ அரிசியைத்தான் வாங்க முடியும். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே 100 ரூபாய்தான் இப்போதும் நம்மிடம் இருக்கிறது. ஆனால், அதே அளவிலான மதிப்பு இல்லை. அதனால்தான் 2.5 கிலோ அரிசி வாங்க முடிந்த 100 ரூபாயால் இப்போது 1.5 கிலோ அரிசி மட்டுமே வாங்க முடிகிறது.
இப்படி ஒவ்வொரு பொருளின் விலை அதிகரித்தால், அவை அனைத்தையும் வாங்குவதற்கு நாம் செய்ய வேண்டிய செலவும் அதிகரிக்கும் அல்லவா? அப்படியானால், இன்றைக்கு நம் வீட்டுச் செலவு ரூ.50,000 ஆகிறது எனில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு பணம் நம் குடும்பத்தை நடத்தத் தேவைப்படும்?

பணவீக்கம் அதாவது, விலைவாசி உயர்வு விகித வளர்ச்சிக்கேற்ப, நம் குடும்பத்தை நடத்தத் தேவையான பணத்தின் அளவு அதிகரிக்கும். தற்போது சில்லரைப் பணவீக்க விகிதம் நமது ரிசர்வ் வங்கி அறிவிக்கிறபடி சுமார் 4% என்கிற அளவில் இருக்கிறது. இந்த விகிதம் மாறிக்கொண்டே இருக்கும். இதனுடன் கல்விப் பணவீக்கம் மற்றும் மருத்துவப் பணவீக்கம் ஆகிய இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், 6% என்கிற அளவில் இருக்கும். ஆக, ஆண்டுதோறும் 6% நாம் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்கிறபோது, 10 ஆண்டுகள் கழித்து, நாம் செலவு செய்ய வேண்டிய தொகையை இனி பார்ப்போம்…

இப்போது ஒரு குடும்பத்தின் வீட்டுச் செலவு ரூ.15 ஆயிரம் எனில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.26,863 செலவு செய்ய வேண்டி இருக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு எனில், ரூ.48,107 செலவு செய்ய வேண்டியிருக்கும்!
இப்போது ஒரு குடும்பத்தின் வீட்டுச் செலவு ரூ.25 ஆயிரம் எனில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.44,771 செலவு செய்ய வேண்டி இருக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு எனில், ரூ.80,178 செலவு செய்ய வேண்டியிருக்கும்!
இப்போது ஒரு குடும்பத்தின் வீட்டுச் செலவு ரூ.50 ஆயிரம் எனில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.89,542 செலவு செய்ய வேண்டி இருக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு எனில், ரூ.1,06,357 செலவு செய்ய வேண்டியிருக்கும்!
ஒரு மாதத்துக்கு இவ்வளவு தொகை தேவைப்படும் எனில், 12 மாதங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
விலைவாசி உயர்வை நம்மால் தடுக்கவே முடியாது. விலைவாசி உயர்வுக்கேற்ப நாம் அதிகமாக சம்பாதித்தே ஆகவேண்டும். அல்லது, நாம் செய்யும் முதலீடு பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தருகிற மாதிரியாவது இருக்க வேண்டும்.

நம்மிடம் இப்போது 10 லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை பாதுகாப்பான வங்கி எஃப்.டி ஒன்றில் 10 ஆண்டுகள் போட்டு வைத்தால், அதிகபட்சம் 7% – 8% வட்டி வருமானம் கிடைக்கும். ஆனால், பணவீக்கமே 6%, வரி 1% என்று போய்விட்டால், கூடுதலாக நமக்குக் கிடைக்கும் லாபம் 1% மட்டுமே!
இதே 10 லட்சம் ரூபாயைக் கொஞ்சம் ரிஸ்க் உடைய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 10 ஆண்டுகள் போட்டு வைத்தால், சுமார் 12% வரை லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
பணவீக்கம் 6%, வரி 2% என்று வைத்துக்கொண்டால், ஆண்டுதோறும் 4% கூடுதலாக லாபம் கிடைக்கும். இப்படி 10 ஆண்டுகள் தொடர்ந்து கிடைக்கும்போது, விலைவாசி உயர்வை எளிதாக சமாளிக்க முடிகிற மாதிரி இருக்கும்!
இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டால், எதிர்காலத்தில் நாம் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்கலாம்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?
இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் – https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான ‘லாபம்’-ஐத் தொர்புகொள்ளுங்கள் – மிஸ்டு கால்: 9600296001
நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் – https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.
