இந்திய அரசு செயலரிடமிருந்து (SECRETARY OF STATE) ஒப்புதல் கிடைத்தவுடன், மெட்ராஸ் மாகாண அரசு, மேட்டூர் அணைத் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கத் தொடங்கியது. 1925 ஜூலை 20 ஆம் தேதி, மெட்ராஸ் மாகாண கவர்னர் “லார்டு விஸ்கவுன்ட் கோச்சன்” அவர்கள் கலந்துகொண்ட சிறப்பு விழாவில், மேட்டூர் அணையின் பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன.
அப்போது அணையின் வலது புறம் பாறைகள் நிறைந்த இடத்தில் கலவை இயந்திரம் பொருத்தும் வேலை நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு விழா நாளன்று, கல்வெட்டுத் திறப்பு மற்றும் பாறை வெடிப்பு நிகழ்ச்சி மூலம் கட்டுமானப் பணி பூர்வாங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க விழாவுக்கு ஏராளமான விருந்தினர்களும், பார்வையாளர்களும் வந்திருந்தனர்.
தொடக்க விழா உரை
கவர்னர் தனது உரையில், இந்தத் திட்டம் மெட்ராஸ் மாகாணத்தின் எதிர்கால விவசாய செழிப்புக்கு அடிப்படை அம்சமாக அமையும் என வலியுறுத்தினார். ஆர்தர் காட்டன் 1834-ல் முன்மொழிந்த யோசனை, பல்வேறு தாமதங்களும் சிக்கல்களும் கடந்து இப்போது செயல்படத் தொடங்கியதை அவர் வரலாற்றுப் பார்வையில் எடுத்துக்காட்டினார். மேலும், இனி கோதாவரி அல்லது கிருஷ்ணா போல நேரடி பாசனத் திட்டங்கள் சாத்தியமில்லை; பெருவெள்ளங்களைத் தேக்கி வைப்பதே ஒரே தீர்வு என்று குறிப்பிட்டார். அதற்குச் சிறந்த உதாரணமாக காவிரி–மேட்டூர் திட்டம் என்று புகழ்ந்தார்.
அதன் பின், கவர்னர் பவானி ஆற்றில் எதிர்காலத்தில் ஒரு நீர்த்தேக்கத் திட்டம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார். பல பொறியாளர்கள் – மேஜர் லா ஃபோர்ட், மேஜர் ஃபிரேசர், மோஸ், கர்னல் எல்லீஸ் போன்றோர் – முன்மொழிந்த திட்டங்களின் சுருக்க வரலாறும் உரையில் இடம் பெற்றது. இறுதியாக, சென்னை–மைசூர் நீர்ப் பங்கீடு பிரச்சினை 1924 ஒப்பந்தத்தின் மூலம் தீர்க்கப்பட்டு, மேட்டூர் திட்டம் முன்னேறியது என்றாலும் சுமார் 15 வருட காலம் தள்ளிப்போனதை அவர் விளக்கினார்.
தொடக்கத்தில், திட்டம் 200 அடி உயரம், 6352 அடி நீளமுள்ள அணையை உள்ளடக்கியது என்றும், மொத்த நீர்த்தேக்கம் 93,500 மில்லியன் கன அடி கொள்ளளவு எனவும் நிர்ணயிக்கப்பட்டது. கட்டுமானச் செலவு மட்டும் ரூ. 375 லட்சம், கால்வாய் அமைப்புகளுக்கு ரூ. 157 லட்சம் என மதிப்பிடப்பட்டது. மொத்தத்தில், 3,01,000 ஏக்கர் நிலங்களுக்கு முதலாம் போகமும், 90,000 ஏக்கர் நிலங்களுக்கு இரண்டாம் போகமும் பாசன வசதி ஏற்படும். வருவாய் ஆண்டுக்கு ரூ. 46.5 லட்சம் என கணிக்கப்பட்டது போன்ற விபரங்களை எடுத்துரைத்தார்.
கட்டுமான முறையில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தவும், “Cyclopean masonry” முறையில் பெருங்கற்களை கான்கிரீட் கலவையில் மூழ்கவைத்து அணை கட்டவும், அருகிலுள்ள குவாரிகளில் இருந்து கற்கள் எடுக்க ரயில் பாதைகள் (TRAM) அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று விளக்கினார். பளுத்தூக்கிகள் (DERRICKS), கல் உடைக்கும் இயந்திரங்கள், கிரஷர்கள், மையக் கட்டுப்பாட்டில் இயங்கும் மின்சார நிலையம் எனப் பல முன்னேற்றமான வசதிகள் பணி தளத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டது.
6000 தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என கணிக்கப்பட்டது. தொழிலாளர்களின் நலனில் கவனம் செலுத்த, சுகாதார முகாம்கள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் வடிகால் அமைப்புகள், மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிலாளர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் திட்டம் செலவுகள் அதிகரிக்காமல் சீராக முடியும் என்பதை அரசு நன்கு உணர்ந்திருந்தது போன்றவை உரையில் இடம் பெற்றிருந்தன..
இருப்பினும், இவ்வாறு உரையில் கூறப்பட்ட சில விஷயங்கள் பின்னர் நடைமுறையில் இடம்பெறவில்லை. உதாரணமாக, “கிரிமினல் செட்டில்மெண்ட்” என்ற இடங்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைப்பது என்பது நடந்ததாக சான்றுகள் இல்லை.

மிக விரிவான இந்த உரையில் பல தகவல்களை நம்மால் பெற முடிகிறது. இந்த திறப்பு விழா 1925ம் ஆண்டு ஜுலை மாதம் நடந்திருந்தாலும், நில கையகப்படுத்தும் வேலைகள், பாலம் கட்டும் வேலை, சாலை வசதி அமைத்தல், நிதி ஒதுக்குவது குறித்து சட்டமன்ற நடவடிக்கைகள் காரணமாக 1927-ம் ஆண்டிலிருந்து தான் பணிகள் முழுவீச்சில் நடைபெற துவங்கியது.
மேலும், ஆச்சரியமாக, திறப்புவிழா கண்ட பிறகு, அணையின் முக்கியச் சுவர் கட்ட குறிக்கப்பட்ட “Site-D” என்ற இடத்துக்குப் பதிலாக ஒட்டு மொத்தமாக முற்றிலும் வேறு இடத்தில் அணை கட்டப்பட்டது. “திரைப்பட இடைவேளை” காட்சியில் நிகழும் எதிர்பாராத நிகழ்வு போல, ஒட்டு மொத்தமாக வேறு இடத்தில்தான் இன்று நிலைத்து நிற்கும் அணை கட்டப்பட்டுள்ளது என்பது மிகுந்த வியப்பைத் தரும் அம்சம். இந்த மாற்றம் (TWIST) பின்னாளில் மக்களுக்கு பெரும் நன்மையாக அமைந்தது என்பது ஓர் எதிர்பாராத திருப்பம்.
இவ்வாறு, 1925-ம் ஆண்டின் தொடக்க விழா, மேட்டூர் அணை வரலாற்றின் மிக முக்கியமான மைல் கல்லாகவும், தமிழ்நாட்டின் பாசன வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகவும் அமைந்தது.
தகவல் தொடர்பும் அணையின் இடமாற்றமும்!
மேட்டூர், புவியியல் ரீதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றின் வலது கரையில் அமைந்திருந்தாலும், 1925 ஆம் ஆண்டில் அங்கு நேரடி சாலை அல்லது பாலம் வசதி எதுவும் இல்லை. காவிரி சுமார் 1200 அடி அகலமுடன், பெருவெள்ள காலங்களில் கடந்து செல்ல முடியாத ஆறாக இருந்ததால், பவானியில் இருந்த பாலமே அருகிலிருந்த ஒரே வழி.
மேட்டூரிலிருந்து கிழக்கு கரைக்குச் செல்ல வழியில்லாமல், சில மண் பாதைகள் மட்டுமே நங்கவள்ளி, மேச்சேரி போன்ற ஊர்களை இணைத்தன. சேலத்திலிருந்து சாலை வழியாக மேட்டூர் செல்ல வேண்டுமெனில் சேலத்திலிருந்து பவானி சென்று அங்கிருந்து 26 மைல்கள் வடக்கு நோக்கி வண்டித்தடம் மூலம் பயணம் செய்தால் மட்டுமே முடியும். இதனால் தகவல் தொடர்பும், போக்குவரத்தும் மிகுந்த கடினமாக இருந்தது.

இந்த சமயத்தில் நினைவு கூறத்தக்க விஷயமாக பவானி – மேட்டூர் சாலை செப்பனிட்டு தயார் செய்வதற்கு முன்பு பவானியில் இருந்து மேட்டூருக்கு தகவல் பரிமாற்றம் மிகுந்த கடின சூழ்நிலைக்கு இடையில்தான் நடந்தேறியிருக்கிறது. மாட்டு வண்டிகள் ஓடும் வண்டி தடங்கள் மட்டுமே அப்போது இருந்தது.
History of Cauvery-Mettur Project என்ற குறிப்பு நூலை எழுதியவரும் மேட்டூர் அணையின் கண்காணிப்பாளராக பணியில் அமர்ந்த திரு சி. ஜி. பார்பர் ஒரு முறை 1925 – 26 ஆம் ஆண்டு வாக்கில் பவானியில் இருந்து மேட்டூர் செல்ல புறப்பட்டு வழியில் ஓரிடத்தில் அவரது மோட்டார் வாகனம் சேற்றில் புதைந்து மேலே பயணத்தை தொடர இயலாமல் போய்விட்டது என்ற விபரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
அது மழை காலமாகவும் காவிரி ஆற்றில் அதிக வெள்ளம் வந்து கொண்டிருந்த நேரமாக இருந்ததாலும் சாலையில் தேங்கிய நீர் மிகவும் அதிகமாக இருந்ததால் அவர் தன் பயணத்தை கைவிட்டு மீண்டும் பவானிக்கே திரும்பிச் சென்று விட்டார். எனவே, மேட்டூர் கிராமம் மழைக்காலங்களில் சில சமயம் வெளியுலக தொடர்புகளிலிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் முற்றிலும் எந்தவித தொடர்பும் இன்றி முழுவதுமாக துண்டிக்கப்படும் நிகழ்வுகள் சகஜமாக இருந்தது.
பவானி–மேட்டூர் சாலை பழுதடைந்த நிலையில் இருந்தாலும் இது கொள்ளேகால் மற்றும் மைசூர் சென்றடைய உதவும் முக்கியமான சாலையாக இருந்ததாக சரித்திரச் சான்றுகள் உள்ளன! அணைக்கட்டும் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து கொண்டு செல்ல, மேற்கண்ட சாலையை சீரமைத்து, 14 அடி அகலமுள்ள மெட்டல் சாலையாக மாற்றினர்.
சித்தாறு ஓடையில் பாலம் அமைத்து, ரூ. 9 லட்சம் செலவில் 1927-ல் இந்தப் புனரமைப்பு நிறைவேற்றப்பட்டது. இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தும் பணி செயற்பொறியாளர் T.I.S. மெக்கேயின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு, பல சிரமங்களைத் தாண்டி வேலைகள் தாமதமின்றி நடந்தன. இதற்கிடையில், தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள், சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டன; பழைய கட்டிடங்கள், கூடாரங்கள் பயன்படுத்தப்பட்டன.
1925 ஜூலை மாதம் நடைபெற்ற தொடக்க விழாவில், கர்னல் எல்லீஸ் குறிப்பிட்ட “Site-D” பகுதியில் மாதிரி பள்ளங்கள் தோண்டப்பட்டு, அஸ்திவாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பாறைகளில் பிளவுகள், துகள்தன்மை, உடையக்கூடிய தன்மை ஆகியவை கவலைக்குரியதாகத் தெரியவந்தன. இதனால் அங்கு கட்டுமானம் மிகுந்த செலவையும், அபாயத்தையும் ஏற்படுத்தும் என உணரப்பட்டது. இது பொறியாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனித உழைப்புக்கு மீறிய கடவுள் செயல் என்பதா? அல்லது இயற்கை எப்போதும் மனித குலத்துக்கு நன்மையே செய்யும் என்பதா? அல்லது கடின உழைப்பும், நுண்ணிய அறிவும் எப்போதும் தவறுகளை தவிர்த்து விட உதவும் என்று புரிந்து கொள்வதா? என அறுதியிட்டு கூற இயலவில்லை. ஆம்! ஒரு அற்புதம் நடந்தது என்றே கூற வேண்டும்.
அந்த நேரத்தில் புவியியலாளர்கள் டாக்டர் ஸ்மீத் மற்றும் விநாயக ராவ் மேட்டூருக்கு வந்து ஆய்வு செய்து, “Site-D” வலுவற்றது என்று அதிர்ச்சி அறிக்கையை அளித்தனர். அதே சமயம், C.G. பார்பர் மற்றும் ஸ்டோனி ஆய்வு செய்து கண்டு வைத்திருந்த “SITE-Y” என்ற பகுதி புவியியல் ரீதியாக சிறந்ததாக தெரியவந்தது. அங்கு அஸ்திவாரம் குறைந்த ஆழத்தில் கிடைக்க, பாறைகள் வலிமையாகவும் விரிவாகவும் பரவியிருந்தன. இதனால் “SITE-D” சோதனைகள் நிறுத்தப்பட்டு, “SITE-Y”-யில் கவனம் திருப்பப்பட்டது.
இயற்கையின் வினோத திருப்பமாக, ஏற்கனவே விழா நடந்த இடத்தை விட்டு விலகி, புதிய இடத்தில் அணை எழுப்பப்பட்டது வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஒரு நிகழ்வாகும். இன்று கிழக்கு–மேற்கு திசையில் நேராக விரிந்து நிற்கும் மேட்டூர் அணை, அந்த இறுதி நிமிட மாற்றத்தினால்தான் சாத்தியமானது. திடீர் மாற்றமாக தோன்றினாலும், இது தமிழக விவசாயத்திற்கு பெரும் நன்மை பயந்த அதிசய தருணம்.
தொடர்ந்து பயணிப்போம்…
காவிரி நன்னீர் சிறப்பு
