தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அந்த தொகுதியின் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜியையும் அந்த அந்த மாவட்டங்களுக்கு உட்டப்பட்ட பகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து இன்று (31-03-26) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதில் அவர் பேசுகையில், “சிவகாசி பகுதியில் தயாரிக்கப்படுகின்ற பட்டாசு தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. பட்டாசு தொழிலுக்கு பல நெருக்கடி வந்தது. இந்த பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் வாதாடினோம். அதிமுக ஆட்சியின் பொழுது, நான் முதலமைச்சர் இருந்த காலகட்டத்தில், ராஜேந்திர பாலாஜி என்னுடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த காலகட்டத்தில், ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்து சாதனை படைத்தோம். இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்த வரலாறு கிடையாது.
ஜெயலலிதா இருக்கின்ற பொழுது 2011லிருந்து 2016 வரை 6 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தார்கள். 2011லிருந்து 2021 வரை 17 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாட்டு மக்களுக்கு கொண்டு வந்தது அதிமுக தான். நம்முடைய இளைஞர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வி கிடைக்க செய்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையினருக்கு, பெண்களுக்கு, பாட்டிமாருக்கு ஆக யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத ஒரு கையாலாகாத அரசாங்கம் திறமையற்ற அரசாங்கம். பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற காரணத்தினால் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நிரந்தர டிஜிபி கூட நியமிக்க முடியாத ஒரு கேவலமான அரசாங்கம் திமுக அரசாங்கம்.
இந்த திமுக அரசாங்கத்துக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை குடும்பத்தை பற்றி தான் கவலை. தன் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற சிந்தனையில் செயல்படுகின்ற ஸ்டாலினுடைய அரசு தொடர வேண்டுமா? அதிமுக ஆட்சி மலர்ந்தால் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதையும் தமிழகத்தில் ஒழிக்கப்படும். போதை பொருள் முழுமையாக தமிழகத்தில் அகற்றப்படும். மூன்றே மாதத்தில் கஞ்சா எங்கும் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கின்ற அரசாக அதிமுக அரசு இருக்கும்.
போதை ஆசாமியால் எங்கே பார்த்தாலும் கொலை நடக்கிறது, கொள்ளை நடக்கிறது, வழிப்பறி நடக்கிறது. பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்ல, சிறுமிகளுக்கே பாதுகாப்பில்லை. ஆழுகின்ற தலைமையிலே பொறுப்பில் இருக்கின்றவர்கள் சரியான முறையில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய காரணத்தினால் இப்படிப்பட்ட ஒரு மோசமான நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கின்ற ஒரே தேர்தல் சட்டமன்ற பொது தேர்தல். திராவிட முன்னேற்ற கழகம் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலை உயர்ந்துவிடும். ஆனால் அதை குறைப்பதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சிதான் சூப்பர் ஆட்சி, இந்தியாவுக்கு முதன்மையான ஆட்சி திமுக ஆட்சி என்று ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் சொல்கிறார். ஊழல் செய்வதில் தான் நம்பர் ஒன் ஆட்சி திமுக ஆட்சி. பல துறைகளில் ஊழல் நிறைந்த அரசாங்கம் திமுக அரசாங்கம். இந்தியாவில் பல மாநிலம் இருக்கிறது. ஆனால் ஊழலுக்கு கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம்” என்று திமுக அரசை காட்டமாக விமர்சித்தார்.
