தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா இயக்கியிருக்கும் படம் ‘தந 2026’. இப்படத்தின் டீசர் தற்போது இருக்கும் அரசியல் சூழல்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்ததால் மக்கள் மத்தியில் படத்திற்கு மிகுந்த எதிர்பர்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டதா? இல்லையா?
பொள்ளாச்சியில் மிகப்பெரிய ஜமீன்தாராக இருக்கும் தம்பி ராமையா மிகத் தீவிர எம்.ஜி.ஆர் பக்தராக இருக்கிறார். இவர் எம்ஜிஆருக்கு பிறகு அடுத்ததாக அதே போன்ற ஒரு இமேஜில் இருக்கும் நபரை பார்க்கிறார். குல்கந்து குமார் என்ற நடிகராக வரும் நட்டியை இவருக்கு மிகவும் பிடித்துப் போக அவரை தன் சொந்த மகன் போல் பாவித்து அவரை வளர்த்து விடுகிறார். அவரும் மிகப்பெரிய ஹீரோவாக மாறி தமிழ் சினிமாவை ஆள்கிறார். பிறகு என்ன… அனைவரும் செய்வது போல் அவரும் அரசியலில் குதிக்கிறார். குதித்த கையோடு சிஎம் ஆக முயற்சி செய்கிறார். அந்த முயற்சியில் அவருக்கு என்ன ஆனது? இவர்களது திட்டம் கைகூடியதா, இல்லையா? என்பதை படத்தின் மீது கதை.
இந்த கால அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதை நையாண்டி செய்வது போல் ஒரு அரசியல் நையாண்டி திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் உமாபதி ராமையா. தற்போது உள்ள சூழலில் நடிகர்கள் அரசியலில் குதிப்பது வழக்கமாக மாறிவிட்டது. அப்படி அரசியலுக்கு வர போகிறேன் எனக் கூறிவிட்டு வராமல் போனவர், வந்து தடம் தெரியாமல் போனவர், வந்து தலைமையை பிடிப்பேன் என்று கூறியவர் என எவரையும் விட்டு வைக்காமல் சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். அது பல இடங்களில் ரசித்து கைதட்டி பார்க்கும் காட்சிகளாக விரிவது படத்திற்கு பிளஸ். இருந்தும் அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும்படி இருப்பதும் பல இடங்களில் செயற்கை தன்மை தெரிவதும் லாஜிக் மீறல்கள் தென்படுவதும் என பல ஸ்பீடு பிரேக்கர்கள் படத்தில் ஆங்காங்கே தென்படுவது அயற்சி கொடுத்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தை எவ்வளவு ஜனரஞ்சகமாக கூற முடியுமோ அந்த அளவு முயற்சி செய்து ஓரளவு அதை ரசிக்கும் படியும் கொடுத்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்து இருக்கின்றனர்.
நட்டி வழக்கம்போல் தனக்கு கொடுத்த நாயகன் வேடத்தை சிறப்பாக நடித்து தற்பொழுது உள்ள நடிகர்களை அப்படியே தன் உடல் மொழியால் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பு கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. இவரின் வலது கையாக இருக்கும் தம்பி ராமையா படம் முழுவதும் வந்து தனக்கு கொடுத்த வேடத்தை மிக மிக சிறப்பாக செய்து படத்திற்கு இன்னொரு நாயகனாகவே மாறி இருக்கிறார். எந்தெந்த இடங்களில் எவ்வளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகர்ளுக்கு இடது கையாக வரும் ரெடின் கிங்ஸ்லி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். பல இடங்களில் கலகலப்பு ஊட்டி இருக்கிறார். நாயகிகள் சாந்தினி, யாஷிகா ஆனந்த் போன்றோர் சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெறுகின்றனர். மற்றொரு நாயகியான ஷேரிட்டா ராவ் தனக்கு கொடுத்த வேலையை வழக்கமான முறையில் செய்து விட்டு சென்று இருக்கிறார். அரசியல்வாதிகளாக வரும் எம் எஸ் பாஸ்கர், தலைவாசல் விஜய், இளவரசு உள்ளிட்ட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். இவர்களின் பங்களிப்பு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
பி ஜி முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. தர்புகா சிவா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பு. எடுத்துக்கொண்ட கதைகளம் சொல்ல வந்த விஷயம் தற்போதுள்ள அரசியல் சூழல் என மிகவும் காண்ட்ரவர்சியான அதேசமயம் எதிர்பார்ப்பு மிக்க கதை களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் அதை இன்னமும் திறன் பட கையாண்டு ஜனரஞ்சகமாகவும் அதேசமயம் நல்ல நையாண்டியுடன் கொடுத்து இருந்தால் இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகியிருக்கும். மேலும் ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து இருக்கும்.
தந (TN) 2026 – நக்கல்
