சென்னை: ”இயந்திரத்துக்கும் சிந்தித்து பதிலளிக்கும் திறனை நாம் கற்றுக் கொடுத்து விட்டோம்; இந்நிலை நீடித்தால் மனித ஆற்றலுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்,” என, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசினார்.
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில், ‘லைப், லா அண்டு லிட்டரேச்சர் -ரிப்ளெக்ஷன்ஸ் ஆப் ஏ ஜட்ஜ்’ என்ற தலைப்பில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஆங்கிலம் மற்றும் தமிழிலில் எழுதியுள்ள புத்தக அறிமுக விழா, சென்னை பார் கவுன்சில் அரங்கில், நேற்று நடந்தது.
தாக்கம்
விழாவில், இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் தலைவர் கு.சாமிதுரை வரவேற்றார். உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா அறிமுக உரையாற்றினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:
கம்பராமாயணம் போன்ற சாகா வரம்பெற்ற நுால்கள், மொழி இருக்கும் வரை அழியாது. எந்த புத்தகமாக இருந்தாலும், அது படிப்பவர்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இளம் சட்ட மாணவர்கள் மத்தியில், இந்த புத்தகம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலக நன்மைக்காக, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவை கண்டுபிடித்த விஞ்ஞானி, இன்று, ‘அந்த தொழில்நுட்பம் என் கைகளை விட்டு சென்று விட்டது’ என்கிறான். உலகம் முழுதும் மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், சட்டம், கல்வி என அனைத்திலும், ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆட்கொண்டு விட்டது.
மகிழ்ச்சி
இந்த சூழலில், இயந்திரத்துக்கும் சிந்தித்து பதிலளிக்கும் திறனை, நாம் கற்று கொடுத்து விட்டோம். அடுத்த ஐந்து அல்லது, 10 ஆண்டுகளில், இதன் ஆதிக்கம் அசுர வேகத்தில் இருக்கும். இந்நிலை நீடித்தால் மனித ஆற்றலுக்கு மதிப்பில்லாமல் போய் விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புத்தகத்தை எழுதிய நீதிபதி என்.ஆன்ந்த் வெங்கடேஷ் பேசியதாவது:
ஒரு குழந்தையை பிரச விக்கும் தாயைப் போல மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் உங்கள் முன்பாக நிற்கிறேன். இதுவரை நான் எதையும் கொடுப்பவனாக இல்லை; பெறுபவனாக மட்டுமே இருந்துள்ளேன். என் இந்த புத்தகமாவது உங்களது கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பொது மேலாளர் சண்முகநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
