இயேசுவுடன் தன்னை ஒப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்: வெடித்தது புதிய சர்ச்சை

நியூயார்க்: இயேசுவுடன் தன்னை ஒப்பிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘கத்தோலிக்க கிறிஸ்துவ மதத் தலைவர் போப் ஆகும் தகுதி எனக்கு உண்டு’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

சமீபத்தில், ஈரான் நாட்டின் ஷியா முஸ்லிம்களின் உச்ச மதத் தலைவர் பதவி தன்னைத் தேடி வந்ததாகவும், அது வேண்டாம் என்று தான் மறுத்ததாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், சமீபத்தில் நடந்த ஈஸ்டர் விழாவில் பங்கேற்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், “குருத்தோலை ஞாயிறன்று இயேசு ஜெருசலேமுக்குள் நுழைந்த போது, மக்கள் அவரை ராஜாவாகக் கொண்டாடினர். தற்போது என்னையும் மக்கள் ராஜாவாக கொண்டாடுகின்றனர்.

எங்கு சென்றாலும் அன்போடு ராஜா என, அழைக்கின்றனர். நான் ராஜா என்றால் இன்னும் நிறைய செய்ய முடியும்,” என, சிரித்தபடி பேசினார்.

இந்த கருத்தை ஆதரிப்பது போல வெள்ளை மாளிகையின் ஆன்மிக ஆலோசகரும், மத போதகருமான பவுலா வைட் கெய்னும் பேசினார்.

அவர் கூறுகையில், “இயேசு தன் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் எண்ணற்ற பாடங்களைக் கற்பித்தார். அதே போல அதிபர் டிரம்பும் செயல்படுகிறார்,” என்றார்.

சமீபத்தில், அமெரிக்காவில், ‘நோ கிங்ஸ்’ என்ற தலைப்பில் போராட்டங்கள் நடந்த நிலையில் அதிபர் டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிடப்பட்டு, சில மணி நேரத்தில் நீக்கப்பட்டது. எனினும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

டிரம்பின் இந்த பேச்சு கிறிஸ்தவ சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை கடவுள் அவமதிப்பு செயல் என, கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source link