இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பது போல் இருந்த பிரதமர் படம் மாற்றம்

மதுரை: மதுரையில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்ட மேடையில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பது போல் இருந்த பிரதமர் மோடியின் படம் மாற்றப்பட்டு, மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு வந்தபோது எடுத்த படம் வைக்கப்பட்டது.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் நேற்று மதுரை மண்டேலா நகரில் பா.ஜ., — அ.தி.மு.க., – அ.ம.மு.க.,- பா.ம.க., – த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக பா.ஜ., தரப்பில் 10 நாட்களாக ஏற்பாடுகள் நடந்தன. மேடையில் பிரதமர் மோடியின் படம் பெரியதாகவும், கூட்டணி கட்சி தலைவர்கள் படம் வரிசையாகவும் வைக்கப்பட்ட பேனர் நேற்றுமுன்தினம் வரை இருந்தது.

பிரதமர் இரு விரலை காண்பிப்பது போல் இருந்த அந்த படம், அ.தி.மு.க.,வின் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பது போல் இருப்பதாக பா.ஜ., நிர்வாகிகள் கருதினர். இதைதொடர்ந்து அந்த படம் மாற்றப்பட்டு மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்தபோது எடுத்த படம் வைக்கப்பட்டது. இது அ.தி.மு.க.,வினரை அதிருப்தி அடைய செய்துள்ளது.

அவர்கள் கூறுகையில், ‘இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பது போல் இருப்பதாக பா.ஜ.,வினர் கருதியது அதீத கற்பனை. அப்படி இருந்தாலும் தவறு இல்லையே. கூட்டணி கட்சியான எங்கள் கட்சி சின்னத்திற்கு அவர் ஓட்டு கேட்பதில் என்ன தவறு.

வெற்றியை குறிக்கும் வகையில் இரு விரல்களை காண்பிக்கும் வகையில் இருந்த பிரதமரின் படம் மாற்றப்பட்டது தேவை இல்லாதது’ என்றனர்.

நேற்றுமுன்தினம் பொதுக்கூட்டத்திற்கான நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஈ.வெ.ரா., படத்தை அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரதமரின் படமும் மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Source link