போபால்: மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும், நமீபியா நாட்டின் சிவிங்கிப்புலிகளில் ஒன்றான, ‘ஆஷா’ இரண்டாவது முறையாக ஐந்து குட்டிகளை நேற்று ஈன்றது.
நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில், ஒரு காலத்தில் சிவிங்கிப்புலிகள் சுதந்திரமாக சுற்றி வந்தன. அவை, அதிகம் வேட்டையாடப்பட்டதால், 1952ல் அந்த இனமே இங்கு அழிந்துவிட்டது.
சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம், ‘புராஜெக்ட் சீட்டா’ என்ற பெயரில் மத்திய அரசால் 2022ல் துவங்கப்பட்டது.
இத்தி ட்டத்தின் மூலம், ஆப்ரிக்க நாடான நமீபியா மற்றும் தென்னாப்ரிக்கா நாடுகளில் இருந்து சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேசத்தின் குனோ பூங்காவில் விடப்பட்டன. இதில், சில சிவிங்கிப்புலிகள் மற்றும் அவை ஈன்ற குட்டிகள் உயிரிழந்தன.
சமீபத்தில், 30 பெரிய மற்றும் குட்டி சிவிங்கிப்புலிகள் இருந்தன. இந்நிலையில், ஆஷா சிவிங்கிப்புலி, 2024க்கு பின் இரண்டாவது முறையாக நேற்று குட்டிகளை ஈன்றது. மொத்தம் ஐந்து குட்டிகள் ஈன்றதால், நாட்டில் உள்ள சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்ட அறிக்கை:
‘புராஜெக்ட் சீட்டா’ திட்டத்திற்கு பெருமையும், மகிழ்ச்சியும் தரும் செய்தியாக, நமீபிய சிவிங்கிப்புலி ஆஷா, ஐந்து குட்டிகளை ஈன்று இரண்டாவது முறை தாயாகி உள்ளது. இதன்மூலம், இந்தியாவில் பிறந்து உயிருடன் உள்ள குட்டிகளின் எண்ணிக்கை, 24 ஆக உயர்ந்துள்ளது. இது, நம் மண்ணில் எட்டாவது வெற்றிகரமான சிவிங்கிப்புலி பிரசவம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
