இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைச் சிக்கல்களுக்கு தீர்வு வேண்டும்; பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைச் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைச் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிக்கத் தடையாக உள்ள முந்தைய நிர்வாக உத்தரவை இரத்து செய்ய வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை அல்லது விசா விண்ணப்பங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, தற்போதுள்ள நடைமுறையில் கடவுச்சீட்டு & விசா தேவைகளைத் தள்ளுபடி செய்யும் நிர்வாக விளக்கத்தை வழங்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர்& எஸ்.பிக்குக் குடியுரிமை & விசா விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும். 2015ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களை ‘சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்’ எனக் கருதக்கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் இந்திய அரசின் ஆதரவோடும் ஒப்புதலோடும் இங்கு வந்தவர்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மண்ணில் வாழ்ந்து வருபவர்கள். அதிலும் 40% பேர் நம் மண்ணில் பிறந்தவர்கள்.

எனவே, அவர்களைச் சட்டவிரோதமாகக் குடியேறிவர்களாகக் கருதிடக் கூடாது. அவர்களுக்கான குடியுரிமை உள்ளிட்ட சட்டப்பூர்வமான தீர்வுகளை இந்திய அரசு வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source link