இலங்கை 'சிங்கம்' நிசங்கா சதம்: ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி

பல்லேகெலே: ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் நிசங்கா சதம் விளாச, இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, ‘சூப்பர்-8’ சுற்றுக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்தியா, இலங்கையில், ‘டி-20’ உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. பல்லேகெலேயில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ‘ரெகுலர்’ கேப்டன் மிட்சல் மார்ஷ் திரும்பினார். ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சூப்பர் துவக்கம்: ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. தீக் ஷனா வீசிய 6வது ஓவரில் வரிசையாக 5 பவுண்டரி விளாசினார் மார்ஷ். துஷன் ஹேமந்தா வீசிய 7வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஹெட், 27 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது ஹேமந்தா பந்தில் ஹெட் (56 ரன், 3×6, 7×4) அவுட்டானார்.

ஹேமந்தா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய மார்ஷ், 25 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 54 ரன்னில் (2×6, 8×4) ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் (22), ஜோஷ் இங்லிஸ் (27) ஓரளவு கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 181 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இலங்கை சார்பில் துஷான் ஹேமந்தா 3, துஷ்மந்தா சமீரா 2 விக்கெட் கைப்பற்றினர்.

முதல் சதம்: சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா (1) ஏமாற்றினார். பின் இணைந்த பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ் ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. மேக்ஸ்வெல் பந்தில் ஒரு ரன் எடுத்த குசால் மெண்டிஸ், 35 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்த போது மெண்டிஸ் (51) அவுட்டானார். நாதன் எல்லிஸ் வீசிய 17வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய நிசங்கா, 52 பந்தில் சதத்தை பதிவு செய்தார். இது, இந்த உலக கோப்பை தொடரின் முதல் சதம்.

ஆடம் ஜாம்பா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பவன் ரத்னாயகே வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நிசங்கா (100 ரன், 5×6, 10×4), பவன் (28 ரன், 6×4) அவுட்டாகாமல் இருந்தனர்.

Source link