இல்லந்தோறும் 'இதயத்தை' பதித்தவர்

சென்னை: தமிழகத்தின் சமையல் எண்ணெய் சந்தையில் தனித்த இடத்தைப் பெற்ற ‘இதயம்’ பிராண்டை உருவாக்கி, வளர்த்த தொழிலதிபர் வி.ஆர்.முத்து, 72. கடந்த 4ம் தேதி காலமானார்.

விருதுநகரில் 1953 அக்டோபர் 6, வி.வி.வி.ராஜேந்திரன் – ஜகதாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்த முத்து பி.காம் பட்டப்படிப்பை முடித்து, சென்னையில் பயிற்சி ஆடிட்டராக மூன்று ஆண்டுகள் இருந்தார். அதன்பிறகு 1978ம் ஆண்டு, தன் குடும்ப தொழிலான நல்லெண்ணெய் தயாரிப்புக்கு திரும்பினார். அதுவே அவருக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.

மார்க்கெட்டிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், அப்போதைய விளம்பர உத்திகளில் கைதேர்ந்தவராக இருந்தார்.

இதன் பலனாக 1980 –86 காலகட்டத்தில், நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தை 12 கோடி ரூபாயாக உயர்த்தினார். 1986ல் ‘இதயம்’ நல்லெண்ணெய் உருவானது.

தந்தையின் மறைவுக்கு பின், 1994ல், நிறுவனத்தின் தலைவராக உயர்ந்து, சகோதரர்களோடு இணைந்து, புது புது விளம்பரங்கள், புது வகையான பேக்கிங் வாயிலாக தமிழக இல்லங்களில் புது வேகத்தோடு நல்லெண்ணெயை கொண்டு சேர்த்தார். ‘நல்லெண்ணெய் என்றாலே அது இதயம் நல்லெண்ணெய்தான்’ என மக்கள் மனதில் பதிய வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக ‘மந்த்ரா’ கடலை எண்ணெய், ‘ஹர்தில்’ கடுகு எண்ணெய், இதயம் அப்பளம், அரிசி, பருப்பு, எள் வகைகள் என்று சமையலுக்கு தேவையான பல பொருட்கள் இதயம் குழுமத்திலிருந்து வெளிவரத் துவங்கின.

நிறுவனத்தை ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் வர்த்தகம் ஆகும் அளவுக்கு ஒரு சாம்ராஜ்யமாக உயர்த்தியதில் இதயம் முத்துவின் பங்களிப்பு மிக முக்கியமானது. தொழிலோடு பல சமூக சேவைகளையும் செய்து வந்தார். பல மாநில, தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

விருதுநகரை எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உருவாக்கும் முயற்சிகளில் இவரது பங்களிப்பு அளப்பரியது.

Source link