ஹராரே: உலக கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உட்பட்ட) பைனலில் அசத்திய இந்திய அணி, 100 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 80 பந்தில் 175 ரன் விளாசி, சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
ஜிம்பாப்வே, நமீபியாவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் நடந்தது. ஹராரேயில் நேற்று நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே, பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆயுஷ் அரைசதம்
இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ் ஜோடி துவக்கம் கொடுத்தது. அரையிறுதியில் சதம் அடித்த ஆரோன், இம்முறை 9 ரன்னில் அவுட்டானார். வைபவ், ஆயுஷ் மாத்ரே இணைந்தனர். கிரீன் பந்தில் வைபவ் முதல் சிக்சர் அடித்தார். இந்திய அணி முதல் 7 ஓவரில் 38/1 ரன் எடுத்தது.
இதன் பின் இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். லம்ஸ்டென் வீசிய 8வது ஓவரில் ஆயுஷ், 4, 4, 6 என அடித்தார். மின்டோ வீசிய 9வது ஓவரில் வைபவ், 6, 4, 4, 4 என அடிக்க, 18 ரன் கிடைத்தன. பர்கான் ஓவரில் (17), 6, 6, 4, 6 என வைபவ் விளாச, 22 ரன் கிடைத்தன. 2வது விக்கெட்டுக்கு 142 ரன் சேர்த்த போது, அரைசதம் அடித்த ஆயுஷ் (53) அவுட்டானார்.
வைபவ் நம்பிக்கை
மறுபக்கம் மின்னல் வேகத்தில் ரன் சேர்த்த வைபவ், 55 பந்தில் சதம் எட்டினார். ஆல்பர்ட் வீசிய 22 வது ஓவரில் வைபவ் (4, 6, 6, 4, 4) ரன் மழை பொழிந்தார். தொடர்ந்து மார்கன் ஓவரிலும் (25), 4, 6, 6, 4 என வைபவ் ரன் சேர்க்க, இந்திய அணி 25 ஓவரில் 250/2 ரன் குவித்தது. இந்நிலையில் 80 பந்தில் 175 ரன் (15X6M 15X4) எடுத்த வைபவ், லம்ஸ்டென் பந்தில் அவுட்டானார்.
இதன் பின் விஹான் (30), வேதாந்த் (32), அபிக்யான் (40) என அடுத்தடுத்தது அவுட்டாக, இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது. கடைசி நேரத்தில் கனிஷ்க் கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 411/9 ரன் குவித்தது. கனிஷ்க் (37) அவுட்டாகாமல் இருந்தார். ஐ.சி.சி., அந்தஸ்து பெற்ற இரு அணிகள் மோதிய யூத் ஒருநாள் போட்டியில் 400 ரன்னுக்கும் எடுக்கப்பட்ட முதல் ஸ்கோர் இது ஆனது.
பல்கானர் ஆறுதல்
கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு டாகின்ஸ், ஜோசப் (17) ஜோடி துவக்கம் தந்தது. மேயஸ் 48 ரன் எடுத்தார். கேப்டன் தாமஸ் ரியு 31 ரன் எடுத்தார். போட்டியின் 21வது ஓவரை வீசிய ஆயுஷ், 4வது பந்தில் அரைசதம் அடித்த டாகின்சை (66) அவுட்டாக்கினார். கடைசி பந்தில் ஆல்பர்ட் (0) ரன் அவுட்டானார். 22வது ஓவரை வீசிய தீபேஷ், பர்கான் (1), செபாஸ்டியனை (0) அவுட்டாக்க, இந்தியா பக்கம் வெற்றி திரும்பியது.
8வது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த போது, ஜேம்ஸ் (28) வீழ்ந்தார். மறுபக்கம் தனி நபராக போராடிய பல்கானர், 63 பந்தில் சதம் அடித்தார். இவர் 115 ரன் எடுத்து, கனிஷ்க் பந்தில் அவுட்டாக, இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இளம் இந்திய அணி, ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. வைபவ் ஆட்டநாயகன் ஆனார்.
ஆறாவது கோப்பை
உலக கோப்பை (19 வயதுக்கு உட்பட்ட) தொடரில் 10 முறை பைனலில் விளையாடிய இந்திய அணி ஆறாவது முறையாக (2000, 2008, 2012, 2018, 2022, 2026) சாம்பியன் ஆனது. 2006, 2016, 2020, 2024 ல் இரண்டாவது இடம் பிடித்தது.
* முகமது கைப் (2000), கோலி (2008), உன்முக்த் சந்த் (2012), பிரித்வி ஷா (2018), யாஷ் துல் (2022) வரிசையில் இளம் இந்திய அணிக்கு கோப்பை வென்று தந்த ஆறாவது கேப்டன் ஆனார் ஆயுஷ் மாத்ரே (2026).
15 சிக்சர்
யூத் ஒருநாள் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் ஆனார் வைபவ் (15). தவிர, ஒரு யூத் உலக தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் என சாதனை படைத்தார் வைபவ் (30, 2026).
* நேற்றைய போட்டியில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசினார் வைபவ்.
55 பந்து
யூத் உலக தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர்களில் வைபவ் (55 பந்து) இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் வில் மலாஜ்சக் (52 பந்து, எதிர்-இங்கிலாந்து, 2026) உள்ளார்.
அதிவேக ‘150’
யூத் ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 150 ரன் எடுத்த வீரர் ஆனார் வைபவ். இவர் 71 பந்தில் இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் வைபவ், 84 பந்தில் (2025, எதிர்-யு.ஏ.இ.,) இந்த இலக்கை எட்டி இருந்தார்.
175 ரன்
ஐ.சி.சி., 19 வயது, சீனியர் அளவிலான தொடர்களின் பைனலில் அதிக ரன் எடுத்த வீரர் என சாதனை படைத்தார் வைபவ் (175). இதற்கு முன் 2022, பெண்கள் உலக கோப்பை பைனலில் அலிஷா ஹீலே, 170 ரன் (எதிர்-இங்கிலாந்து) எடுத்ததே அதிகம்.
* யூத் உலக கோப்பை பைனல், ஒருநாள் அரங்கின் ‘நாக் அவுட்’ போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் வைபவ். முன்னதாக 2025 ஆசிய கோப்பை பைனலில் பாக்., வீரர் சமீர் 172 ரன் (எதிர்-இந்தியா) எடுத்தார்.
* யூத் உலக கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இந்தியர் வைபவ் (175). இதற்கு முன் ராஜ் பாவா 162 ரன் (2022, எதிர்-உகாண்டா) எடுத்திருந்தார்.
* யூத் ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் வரிசையில் அம்பதி ராயுடுவுக்கு (177, 2002, இங்கிலாந்து) அடுத்து, இரண்டாவது இடம் பெற்றார் வைபவ் (175).
