இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு; தேர்தல் அதிகாரி நடனமாடி அசத்தல்

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் நடனமாடி அசத்திய, ‘வீடியோ’ மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுக்கள், வரும் மே 4ம் தேதி எண்ணப்பட உள்ளன. ஓட்டளிக்க வரும் இளம் வாக்காளர்களுக்கு முதன்முறையாக, ‘அல்வா’ வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.

இதே போல், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில், ஓட்டுச்சாவடிகளில் இருந்து 2 கி.மீ., சுற்றளவிற்குள் வசிப்பவர்களுக்கு, ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல இலவச பயண சேவையை, ‘ஊபர்’ நிறுவனம் வழங்க உள்ளது.

இந்நிலையில் இளம் வாக்காளர்களிடம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வீடியோ இசை ஆல்பம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு.கேல்கர், திருவனந்தபுரம் கலெக்டர் அனு குமாரி, உதவி கலெக்டர் சிவசக்திவேல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இசைக்குழுவுடன் சேர்ந்து கடற்கரை ஓரம் நடனம் ஆடி அசத்தி உள்ளனர்.

மொத்தம், 1 நிமிடம் 33 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், ‘இது உங்கள் ஓட்டு; நம் மாநிலத்திற்கு உங்கள் ஓட்டு தேவை… ஒரே ஒரு இலக்கு ஆட்டத்தையே மாற்றி அமைக்கக்கூடும்; ஒரே ஒரு ஓட்டு விதியையே மாற்றி எழுதக்கூடும்’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கொச்சியில் சமீபத்தில் வெளியிட்ட இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Source link