இஸ்ரேலுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா

வாஷிங்டன்: ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு 12,000 வான் வழியே தாக்கும் வெடிகுண்டு உறைகளை விற்பனை செய்ய, அமெரிக்க வெளியுறவுத்துறை அவசரகால ஒப்புதலை வழங்கியுள்ளது.

ஈரானுக்கு எதிரான தீவிர போர் நடவடிக்கையில் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், 1,366 கோடி ரூபாய் மதிப்பிலான, 450 கிலோ எடை கொண்ட 12,000 வெடிகுண்டு உறைகளை, இஸ்ரேல் கேட்டுக் கொண்டதன் பேரில், அமெரிக்கா விற்பனை செய்ய உள்ளது. இதற்கான அனுமதியை அந்நாட்டின் வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பிரிவு வழங்கியுள்ளது.

இந்த விற்பனையின் வாயிலாக, தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இஸ்ரேலின் திறனை மேம்படுத்துவதுடன், அதன் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.

வெடி மருந்துகளுடன், அமெரிக்க அரசு மற்றும் ஒப்பந்ததாரர்களின் பொறியியல், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவும் இதில் அடங்கும்.

பொதுவாக, அமெரிக்க ஆயுத விற்பனைக்கு அந்நாட்டு பார்லிமென்டின் ஒப்புதல் தேவைப்படும் என்றாலும், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சில விதிவிலக்குகளின் கீழ், இவ்விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளார்.

வெடிகுண்டு உறை என்பது, வெடிபொருட்களை பொதித்து வைக்கும் கொள்கலன்களாகும்.

Source link