'இஸ்ரோ' விஞ்ஞானியாக நடித்து ஐ.டி., பெண்ணிடம் ரூ.43 லட்சம் 'அபேஸ்'

புனே: மஹாராஷ்டிராவில், திருமண இணையதள பக்கத்தில், ‘இஸ்ரோ’ விஞ்ஞானி என போலியாக பதிவு செய்து, ஐ.டி., பெண் ஊழியரிடம் 43 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள வக்காட் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், அப்பகுதியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

இவர், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததை அடுத்து, 2024ல் பிரபல திருமண தகவல் இணையதளத்தில் தன் விபரங்களை பதிவு செய்தார்.

அடுத்த சில மாதங்களிலேயே, அலிபாக் பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் இளம்பெண்ணை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.

தன் பெயர் ஜெயேஷ் பாட்டீல் என்றும், இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிவதாகவும் தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அவர், பல்வேறு காரணங்களை கூறி அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் கறந்தார்.

வாங்கிய தொகை அனைத்தும் திருமணத்துக்கு பிந்தைய வாழ்க்கைகான எதிர்கால சேமிப்பு என்று இளம்பெண்ணிடம் ஜெயேஷ் உறுதியளித்தார்.

இதை நம்பி, கடந்த 2024, நவம்பர் முதல் 2025, ஜன., வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் 43 லட்சம் ரூபாயை அவரிடம் இளம்பெண் தந்தார். இருவரும் அவ்வப்போது நேரிலும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த சந்திப்பின் போது நடத்திய பேச்சில், ஜெயேஷ் இஸ்ரோ விஞ்ஞானி இல்லை என்ற உண்மை இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதையடுத்து, வக்காட் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

அதில், ‘திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து என்னிடம் இருந்து பலமுறை ஜெயேஷ் பாட்டீல் பணம் பெற்றார். இஸ்ரோ விஞ்ஞானி என கூறி என்னை ஏமாற்றினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த ஜெயேஷ் பாட்டீல் எனப்படும் ஆதர்ஷ் மாத்ரே என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 16.65 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், மீதி தொகையை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மோசடி செய்து வாங்கிய பணத்தில் கோவா சென்று ஜெயேஷ் பாட்டீல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source link