இஸ்லாமாபாத் : அமெரிக்கா – ஈரான் இடையே இரண்டு வார தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பின்போது, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கு ஈரான் ஒப்புக் கொண்டது. இதை தொடர்ந்து இரு தரப்பும் நேற்று பல விஷயங்கள் குறித்து பேசின; இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட பேச்சுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதலை கடந்த பிப்., 28ல் துவக்கின. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
பதற்றம்
இருப்பினும், சண்டையில் இருந்து ஈரான் பின் வாங்கவில்லை; மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கியது.
கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் அப்பிராந்தியத்தின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பொருளாதார அழுத்தத்தை சந்தித்தன.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி ‘ஈரான் நாகரிகத்தையே அழித்துவிடுவேன்’ என அதிபர் டிரம்ப் கொக்கரித்தார்; அதற்காக கெடு விதித்திருந்தார். இதனால், ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படுமோ என்ற பதற்றம் எழுந்தது.
கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மத்தியஸ்த முயற்சியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இரு வார தற்காலிக போர் நிறுத்தத்துக்கு
ஒப்புக்கொண்டன. இதையடுத்து, அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பை இஸ்லாமாபாதில் பேச்சு நடத்த, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.
தாமதம்
இதை இரு தரப்பும்ஏற்றன. ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு நேற்று முன்தினமே இதற்காக இஸ்லாமாபாத் வந்தது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினர் நேற்று காலை இஸ்லாமாபாத் வந்தனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா தரப்பினர் தனித் தனியே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர். இதில், ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட முன்வைப்புகளில் சிலவற்றை அமெரிக்கா ஏற்றுக் கொண்டது.இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கு ஈரான் ஒப்புக் கொண்டது. இவ்வாறு மாறி மாறி கூட்டங்கள் நடந்தன. இதனால், அமைதி பேச்சுக்கான கூட்டம் ஐந்து மணி
நேரம் தாமதமாகி மாலை துவங்கியது.
எச்சரிக்கை
ஈரான் தரப்பு, பொருளாதாரத் தடைகளை நீக்குதல், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல், லெபனானில் போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு, போர் இழப்புகளுக்கு இழப்பீடு ஆகியவற்றை வலியுறுத்தியது. இதில் சிலவற்றை அமெரிக்கா ஏற்றதாக
தகவல் வெளியாகிஉள்ளது.
அமெரிக்கா தரப்பு, ஈரானின் அணு ஆயுத திட்டம், ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வைத்தல் போன்ற விவகாரங்களில் உறுதியான உத்தரவாதத்தை கோரியது.முன்னதாக பேச்சு துவங்கும் முன், ‘பேச்சை தோல்விக்கு இட்டுச் சென்றால் ஈரானை மீண்டும் தாக்குவோம்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
‘ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால் அது அமெரிக்க எரிசக்தி துறைக்கே சாதகமாக அமையும். கச்சா
எண்ணெயை நல்ல லாபத்துக்கு விற்பனை செய்வோம்’ எனவும் தெரிவித்தார்.
நேற்று இரவு நிலவரப்படி உறுதியான ஒப்பந்தம் எதுவும் இரு தரப்பிலும் எட்டப்படவில்லை. இருப்பினும் சில முக்கிய அம்சங்களில் இரு தரப்புக்கும் இடையே சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, அடுத்த சுற்று பேச்சுகள் வரும் நாட்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைத்த கண்ணி வெடிகளைகண்டுபிடிக்க திணறும் ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அதிகளவில் கடல் கண்ணி வெடிகள் வைத்துள்ளதாகவும், அதனால், ஜலசந்தியின் பெரும்பகுதி ஆபத்தான பகுதியாகவும் ஈரான் அறிவித்தது. இந்நிலையில், கடலில் எங்கெங்கு கண்ணி வெடிகள் வைக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள் ஈரானுக்கே தெரியவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.
அவற்றை கண்டறிய முடியாமல் ஈரான் திணறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் முழு கடற்பகுதியுமே தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. கண்ணி வெடிகளை வைப்பது எளிது; ஆனால், அவற்றை அகற்றுவதற்கு நவீன தொழில்நுட்பம் தேவை.
அது ஈரானிடம் தற்போது இல்லை என கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க போர் கப்பல்கள்
அமெரிக்கா – ஈரான் இடையே பாகிஸ்தானில் பேச்சு நடந்து வந்த அதே நேரத்தில், அமெரிக்க கடற்படையின் இரண்டு போர்க் கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை நேற்று கடந்தன. போர் துவங்கியதில் இருந்து, ஜலசந்தி வழியாக அமெரிக்க போர்க் கப்பல்கள் செல்வது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக ஈரான் ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்காவிட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து விடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியிருந்தார்.
