இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுடன் மோதல் நடந்து வரும் நிலையில், அந்நாட்டுடனான சண்டையை, வெளிப்படையான போராக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடான பாக்., அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன், 2,611 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த பகுதி, ‘டுராந்த் கோடு’ எனப்படுகிறது. இதை, ஆப்கானிஸ்தான் இதுவரை முறையாக அங்கீகரிக்கவில்லை.
குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தானில் இருந்து, டி.டி.பி., எனப்படும் தெஹ்ரீக் – இ – தலிபான் பாக்., என்ற அமைப்பு தொடர்ந்து பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த அமைப்பை கட்டுப்படுத்தும்படி பலமுறை வலியுறுத்தியும், ஆப்கானிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பாக்., குற்றஞ்சாட்டி வருகிறது.
தங்கள் நாட்டின் மீது டி.டி.பி., அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கன் எல்லையில் உள்ள டி.டி.பி., முகாம்களை குறிவைத்து, அந்நாட்டு எல்லைக்குள் பாக்., விமானப்படை நுழைந்து கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதில், 18 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கன், பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, நேற்று ஆப்கானிஸ்தானின் காபூல், கந்தகார், பக்தியா ஆகிய இடங்களில் பாக்., நடத்திய வான்வழி தாக்குதலில், 130க்கும் மேற்பட்ட தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுத்து, பாக்., எல்லையில் உள்ள பகுதிகளில் ஆப்கானிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நீடிக்கிறது.
இந்நிலையில், பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா நேற்று தெரிவித்ததாவது:
எங்கள் பொறுமை முடிவுக்கு வந்து விட்டது. தற்போது ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போர் மூண்டுள்ளது. இனி, விளைவுகள் குறித்து கவலைப்படாமல் அதிரடியாக செயல்படுவது தான் ஒரே வழி. நாங்கள் கடல் தாண்டி வரவில்லை.
தலிபான்கள் இந்தியாவின் ஒரு முகவராக மாறி விட்டதுடன், அந்நாட்டின் காலனியாக ஆப்கானிஸ்தானை மாற்றி விட்டனர். உலகெங்கும் உள்ள பயங்கரவாதிகளை ஒன்று திரட்டி, பயங்கரவாதத்தை பாக்., மீது ஏவி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை
பாக்., தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் கூறுகையில், “133 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தலிபான்களின் 27 சோதனைச்சாவடிகள், இரண்டு படைப்பிரிவு தலைமையகங்கள், வெடி மருந்து கிடங்குகள் மற்றும் 80க்கும் மேற்பட்ட பீரங்கிகள் அழிக்கப்பட்டன,” என்றார்.
ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்களின் பதிலடி தாக்குதலில், 55 பாக்., ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; 19 சோதனைச்சாவடிகள், இரண்டு தலைமையகங்களை கைப்பற்றி உள்ளோம்’ என குறிப்பிடப் பட்டுள்ளது.
இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும், பேச்சு வாயிலாக போரை நிறுத்த வேண்டும் என்றும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
