இஸ்லாமாபாத்: ஈரான் போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் அரசு திட்டமிட்ட இரு நாள் உச்சி மாநாடு, எதிர்பாராத விதமாக ஒரே நாளில் முடிவுக்கு வந்தது. உறுதியான முடிவோ, திட்டமோ இல்லாமல் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்றதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து மேற்காசிய நாடான ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் மத்தியஸ்தம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டது. இதற்காக இஸ்லாமாபாதில் இரு நாள் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆனால், மத்தியஸ்தம் செய்யும் விதம் குறித்த தெளிவான திட்டத்தை பாகிஸ்தான் முன்வைக்காததால், இரு நாட்கள் நடக்க வேண்டிய இந்த உச்சி மாநாடு எதிர்பாராத விதமாக ஒரே நாளில் முடிவுக்கு வந்தது.
குறிப்பாக, ஈரான் கோரும் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை நிறைவேற்றுவது குறித்து எந்த நாடும் உறுதியான கருத்தை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் நேற்றும் நடக்க வேண்டிய கூட்டத்தை ரத்து செய்து, சவுதி அரேபியா மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர்கள் நேற்று முன்தினமே புறப்பட்டு சென்றனர்.
