இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் தற்கொலை படையை சேர்ந்த நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலியாகினர்; 169 பேர் படுகாயமடைந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் ‘கதிஜா துல் குப்ரா’ என்ற ஷியா பிரிவினர் மசூதி உள்ளது.
குண்டு வெடிப்பு இங்கு நேற்று மதியம் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் போது கூட்டம் அதிகம் இருந்தது. அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் மசூதிக்குள் நுழைய முயன்றார்.
அவரை மசூதி வாயிலில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
அவர் அங்கேயே தன் உடலில் கட்டி வந்த குண்டை வெடிக்க செய்தார். இதனால் அந்த இடம் புகை மண்டலமானது.
தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் குண்டு வெடிப்பில் சிக்கினர். பலத்த சத்தம் கேட்டு பலர் அலறியடித்து ஓடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், ராணுவத்தினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.
அப்பகுதியை கட்டுப்பாட்டில் எடுத்த அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குண்டுவெடிப்பில் சிக்கி 70 பேர் பலியாகினர். 169 பேர் படுகாயமடைந்தனர். மசூதியின் உள்ளே குண்டை வெடிக்க செய்திருந்தால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க இஸ்லாமாபாதில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. இதன் காரணமாக, பலர் அருகில் உள்ள ராவல்பிண்டி நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையி ல் தாக்குதல் நடத்தியவர் வெளிநாட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
தலைகுனிவு தெஹ்ரீக் இ தலிபான் பாகி ஸ்தான் அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருப்பினும், இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பு ம் பொறுப்பேற்கவில்லை.
மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தான் அதிபர் சவுகத் மிர்சியோயேவ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்லாமாபாத் வந்துள்ள நிலையில், இத்தாக்குதல் நடந்துள்ளது பாகிஸ்தானுக்கு தலைகுனிவை ஏற்படுத்திஉள்ளது.
பாகிஸ்தானில் ஷியா பிரிவினரை குறிவைத்து நடக்கும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் இதே போல் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் கொல்லப் பட்டனர்.
