இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டசபையில், சமீபத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டசபையில், சமீபத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘காஷ்மீர் ஒருநாள் பாகிஸ்தானின் அங்கமாகும்’ என கூறினார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும், அந்நாட்டு முப்படை தளபதி அசிம் முனீரும் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டனர்.

முசாபராபாதில் உள்ள பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டசபையில் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:

காஷ்மீர் ஒருநாள் பாகிஸ்தானின் அங்கமாகும். காஷ்மீரிகளுக்கு சுய நிர்ணய உரிமை வழங்குவதை தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை. காஷ்மீர் பிரச்னை சர்வதேச மனித உரிமை பிரச்னை.

பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் இந்தியா வைத்திருக்கும் திட்டங்கள் மற்றும் சதிகளால் தெற்காசியாவில் நீடித்த அமைதி ஏற்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதே போல், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைப் பகுதிக்கு சென்ற முப்படை தளபதி அசிம் முனீர், அங்குள்ள ராணுவ நிலைகளை பார்வையிட்டு வீரர்களை உசுப்பேற்றும் வகையில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் நெருக்கடியை அனுபவித்து வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் மற்றும் முப்படை தளபதி முனீர், மக்களின் கவனத்தை திசை திருப்ப காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறி உள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் முப்படை தளபதியின் பேச்சுக்களை நம் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

‘ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதிகள், பாகிஸ்தான் முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்’ என தெரிவித்துள்ளது.

Source link