இ.எம்.ஐ., தொகையை அதிகமாக பிடித்து வாடிக்கையாளர்களுக்கு ' ஷாக் ' கொடுத்த வங்கி ; கணினி கோளாறால் களேபரம்

‘பேங்க் ஆப் பரோடா’வின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வீட்டுக்கடன் பெற்ற பல வாடிக்கையாளர்களிடம், இம்மாதம் வழக்கமான இ.எம்.ஐ.,யை விட கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

தவறுதலாக வட்டி விகிதத்தை அதிகமாக கணக்கிட்டதே இந்த குளறுபடிக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே கூடுதல் தொகை எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கில் போதிய பணம் இல்லாதவர்கள், கடனை திருப்பி செலுத்தாதவர்களாக வகைப்படுத்தப்பட்டனர். இதனால் அவர்களின் கடன் தரமதிப்பீடும் சரிந்துள்ளது. சிலருக்கு நிலுவை தொகையை செலுத்துமாறு கடன் வசூல் செய்யும் தனியார் முகவர்கள், நெருக்கடியும் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

புனேவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, அவரது வழக்கமான தவணை தொகையான 98,953 ரூபாயை தாண்டி, கூடுதலாக 57,290 ரூபாயை செலுத்துமாறு வங்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடன் தரமதிப்பீடு பாதிக்கப்படுவதை தவிர்க்க, வேறு வழியின்றி அவர் அந்த கூடுதல் தொகையை செலுத்தியுள்ளார். இருசக்கர வாகன கடனை முழுமையாக செலுத்தி முடித்த ஒருவரது கணக்கிலிருந்தும் 33,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த குளறுபடி குறித்து விளக்கமளித்துள்ள பேங்க் ஆப் பரோடா நிர்வாகம், குறிப்பிட்ட சில கணக்குகளில் மட்டுமே இந்த தவறு நிகழ்ந்துள்ளதாகவும், கணக்குகளை சரிபார்க்கும் வழக்கமான நடைமுறையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை வாடிக்கையாளர்களின் கணக்கிலேயே திருப்பி செலுத்தப்பட்டு வருவதாகவும், தவறுதலாக குறைவான வட்டி வசூலிக்கப்பட்டவர்களிடம் இருந்து மீதி தொகை வசூலிக்கப்பட்டுவிட்டதாகவும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடாவின் மொத்த கடனில் 11 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட 1.44 லட்சம் கோடி ரூபாய் வீட்டு கடன்களாகும். வங்கியின் மொத்த சில்லரை கடன்களில் இது சரிபாதியாகும்.

Source link