இ ந்திய நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகளான ஆர்.பி.ஐ., செபி மற்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., ஆகியவை இணைந்து, கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை, ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்கிற சிறப்பு முகாம்களை நாடெங்கிலும் நடத்தின.
இந்த முகாம்கள் வாயிலாக, சுமார் 22.95 லட்சம் உரிமை கோரல்கள் தீர்க்கப்பட்டு, 5,777 கோடி ரூபாய் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வங்கிகளில் 60,518 கோடி ரூபாய், காப்பீட்டு துறையில் 8,974 கோடி ரூபாய், மியூச்சுவல் பண்டில் 3,749 கோடி ரூபாய் என இன்னும் மொத்தம் 73,241 கோடி ரூபாய்க்கு மேல் உரிமை கோரப்படாமல் தேங்கி கிடக்கிறது.
இந்த தொகையை உரியவர்களிடம் சேர்க்க, ஒழுங்குமுறை அமைப்புகள் பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி, உரிமை கோரப்படாத டிபாசிட்களை மீட்டு கொடுக்கும் வங்கிகளுக்கு 5 முதல் 7.5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், வங்கிகள் அவ்வப்போது சிறப்பு முகாம்களை நடத்தி, உரிமையாளர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலிசி எடுக்கும்போதே கட்டாயமாக நாமினி விபரங்களை சேகரிக்கவும், பாலிசிதாரர்களை தேடி சென்று பணத்தை ஒப்படைக்கவும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மியூச்சுவல் பண்டு முதலீட்டில் 5 லட்சம் ரூபாய் வரையிலான கிளைம்களுக்கு ஆவணங்கள் குறைக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், ஆன்லைன் வாயிலாக விரைவாக பணத்தை பெற ‘இமேஜ் பேஸ்டு’ சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
