ஈடன் கார்டனில் கொல்கட்டா தோல்வி * வென்றது ஐதராபாத் அணி

கொல்கட்டா: கிரிக்கெட் லீக் போட்டியில் கொல்கட்டா அணி 65 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோல்வியடைந்தது.

வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் ரகானேவின் கொல்கட்டா அணி, இஷான் கிஷான் கேப்டனாக உள்ள ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற ரகானே, பீல்டிங் தேர்வு செய்தார்.

சூப்பர் துவக்கம்

ஐதராபாத் அணிக்கு ‘டிராவிஷேக்’ கூட்டணி (டிராவிஸ் ஹெட்-அபிஷேக்) ‘சூப்பர்’ துவக்கம் கொடுத்தது. வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ரன் வேகத்தை துவக்கினார் ஹெட். அடுத்து முசரபானி வீசிய ஓவரில் ஹெட், இரண்டு பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் சிக்சர் அடித்தார் அபிஷேக்.

வைபவ் தனது இரண்டாவது ஓவரை வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஹெட், பின் தொடர்ந்து இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி என மிரட்ட, மொத்தம் 21 ரன் எடுக்கப்பட்டன. வருண் சக்ரவர்த்தி வீசிய 5வது ஓவரில் ரன் மழை பொழிந்தார் அபிஷேக். முதல், 3வது பந்தில் சிக்சர் அடித்த இவர், கடைசி 3 பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார். மொத்தம் 25 ரன் எடுக்கப்பட்டன.

ஹெட் (46 ரன், 21 பந்து), கேமரான் கிரீனிடம் ‘கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். சுனில் நரைன் ஓவரில் (8வது), அபிஷேக் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என அடித்தார். இஷான் கிஷான், தியாகி ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாச, 8 ஓவரில் 110/1 ரன் சேர்த்தது ஐதராபாத்.

திடீர் திருப்பம்

போட்டியின் 9வது ஓவரை வீசினார் முசரபானி. 2வது பந்தில் இஷான் (14), 4வது பந்தில் அபிஷேக் (48 ரன், 21 பந்து) இருவரையும் அவுட்டாக்கினார். அனிகேத் வர்மா (1) ஏமாற்றினார். இதன் பின் அணியின் ரன் வேகம் அப்படியே மந்தமானது. அடுத்த 6 ஓவரில் 45 ரன் (9-14) மட்டும் எடுக்கப்பட்டன.

நிதிஷ் குமார், கிளாசன் இணைந்து போராட, ஐதராபாத் அணியின் ஸ்கோர் 18 ஓவரில் 200/4 ரன்களை எட்டியது. நிதிஷ் 24 பந்தில் 39 ரன் எடுத்த போது, வைபவ் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த சலில் அரோராவை (0) ஒரே பந்தில் போல்டாக்கினார் வைபவ்.

முசரபானி ‘நான்கு’

முசரபானி வீசிய கடைசி ஓவரில், அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்த கிளாசன் (52 ரன், 35 பந்து) அரைசதம் விளாசி, அவுட்டானார். ஷிவாங் 4 ரன் எடுத்தார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 226/8 ரன் குவித்தது. கொல்கட்டா சார்பில் முசரபானி 4, வைபவ் 2 விக்கெட் சாய்த்தனர்.

ரகுவன்ஷி ஆறுதல்

கொல்கட்டா அணிக்கு பின் ஆலன், ரகானே ஜோடி துவக்கம் தந்தது. டேவிட் பெய்ன் வீசிய முதல் ஓவரில், 4, 4, 6, 6, 4 என ஆலன் அசத்த, 25 ரன் எடுக்கப்பட்டன. ஹர்ஷ் துபே வீசிய அடுத்த ஓவரில் ஆலன் (28 ரன், 7 பந்து) அவுட்டானார்.

அபிஷேக் ஓவரில் 2 சிக்சர் அடித்தார் ரகுவன்ஷி. மறுபக்கம் ரகானே (8) அவுட்டாக, பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கேமரான் கிரீன் (2) ரன் அவுட்டானார். 29 பந்தில் 52 ரன் எடுத்த ரகுவன்ஷி, துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். ரிங்கு சிங் 35 ரன் (25 பந்து) எடுத்தார். பின் வரிசையில் நரைன் (12), ராமன்தீப் (10), தியாகி (5) என அடுத்தடுத்து கிளம்பினர். கொல்கட்டா அணி 16 ஓவரில் 161 ரன்னில் ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

இரண்டாவது ‘பெஸ்ட்’

கிரிக்கெட் லீக் தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிராக, கொல்கட்டா சார்பில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது வீரர் ஆனார் முசரபானி (4/41). முதலிடத்தில் பிரசித் கிருஷ்ணா (4/30, 2018) உள்ளார்.

41 ‘கேட்ச்’

நேற்று அனிகேத் அடித்த பந்தை பிடித்தார் ரிங்கு சிங். இதையடுத்து, கிரிக்கெட் லீக் தொடரில் கொல்கட்டா அணிக்காக அதிக ‘கேட்ச்’ செய்த வீரர்களில் முதலிடம் பிடித்தார் ரிங்கு சிங் (41 ‘கேட்ச்’). ஆன்ட்ரி ரசல் (40), சுனில் நரைன் (36), மனோஜ் திவாரி (30) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

101 சிக்சர்

அபிஷேக் சர்மா நேற்று 4 சிக்சர் அடித்தார். கிரிக்கெட் லீக் தொடரில் ஐதராபாத் அணிக்காக அதிக சிக்சர் அடித்த வீரர்களில் இரண்டாவது இடம் பெற்றார் அபிஷேக் (101). முதலிடத்தில் வார்னர் (143) உள்ளார். கிளாசன் (89), வில்லியம்சன் (64), ஹெட் (50) 3, 4, 5வது இடத்தில் உள்ளனர்.

Source link