ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் புதிய திட்டம்; கார்க் தீவை கைப்பற்ற முடிவு

வாஷிங்டன்: ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

ஈரான் சரண் அடையும் வரை போர் தொடரும் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்தடுத்து போரை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். நேரடி வான்வழித் தாக்குதல்கள் என்பதோடு மட்டும் அல்லாமல், அந்நாட்டின் பொருளதாரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார்.

குறிப்பாக, ஈரானில் உள்ள கார்க் தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து தமது நிர்வாக அதிகாரிகளுடன் டிரம்ப் முக்கிய ஆலோசனையை நடத்தி இருப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த தீவை தன்னகத்தே கையகப்படுத்தினால் ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் வளம் மற்றும் ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்படும்.

ஈரானின் எண்ணெய் வள ஏற்றுமதியில் 90 சதவீதம் அளவு கார்க் தீவில் இருந்து தான் கையாளப்படுகிறது. முக்கிய ஏற்றுமதி மையமான இதன்மூலம் ஈரான் தினசரி சுமார் 1.6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஈரான் பொருளாதாரத்தின் இதயம் என்று வர்ணிக்கப்படும் கார்க் தீவை கையகப்படுத்தி போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் டிரம்ப் இறங்கி உள்ளார்.

கார்க் தீவு என்பது வடக்கு பாரசீக வளைகுடாவில் புஷேருக்கு அருகில் அமைந்துள்ளது. 1950களில் முதன் முதலில் கட்டமைக்கப்பட்டு, ஈரான், ஈராக் போருக்கு பின்னர் புனரமைக்கப்பட்டது. ஹோர்முஸ் நீரிணைக்கு மிக அருகில் இருக்கிறது.

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு முன்னர், இதே கார்க் தீவில் இருந்து எண்ணெய் உற்பத்தியை முன் எப்போதும் இல்லாத வகையில் தினமும் 4 மில்லியன் பேரல்களாக அதிகரித்தது, குறிப்பிடத்தக்கது.

Source link