மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, தெற்காசிய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து வரும் போர் சூழலால் இந்த நிலை நீடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குவைத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் உள்ள மின்சார மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது குறிவைத்து நடத்தப்பட்ட ஈரானின் தாக்குதலில் பகிர்வு சேவை கட்டிடத்தின் மீது ஏவுகணைகள் தாக்கியது. இதில் பணியாற்றி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 32 வயதான சந்தான செல்வம் உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம் முதுகுளத்தூரை அடுத்துள்ள தேரூர்வேலி கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் 12 ஆண்டுளாக குவைத்தில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த சந்தான செல்வத்தின் உடலைச் சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் அவருடைய உயிரிழப்புக்கு இழப்பீடு கிடைக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்திய தூதரகத்திற்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
