கொழும்பு: அமெரிக்கா எந்தநேரம் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று சூழலில், ஈரானுக்கு சொந்தமான 2வது போர் கப்பலில் இருந்து 208 மாலுமிகளை இலங்கை பத்திரமாக மீட்டது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர், 7வது நாளாக இன்றும் தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. இருதரப்பினரும் ராணுவ தளங்கள், போர் விமானங்கள், கப்பல்கள் என அனைத்தையும் சேதப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் இரண்டு நாள் கடற்படை பயிற்சிகளை முடித்த ஈரானுக்கு சொந்தமான ‘ஐரிஸ் டீனா’ என்ற போர்க் கப்பல், இலங்கை அருகே சென்று கொண்டிருந்த போது, ‘டார்பிடோ’ எனப்படும் நீரில் செல்லும் ஏவுகணை வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது. இதில், 87 பேர் பலியாகினர்.
இதைத்தொடர்ந்து, ஈரானின் 2வது போர்க் கப்பல், 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், இலங்கை கடற்பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பலும் அமெரிக்காவால் குறி வைக்கப்படலாம் என்ற அச்சத்தில், போர்க் கப்பலின் பாதுகாப்பிற்காக அதனை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமாறு இலங்கையிடம் ஈரான் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில், ஈரானின் கோரிக்கை குறித்து விவாதிக்க இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், எடுக்கப்பட்ட முடிவின்படி, ‘ஐரின் புஷேர்’ என்ற அந்தப் போர்க்கப்பல் கிழக்கு திரிகோணமலை துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டு, அதில் இருந்த 208 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் மீட்டு, கொழும்பு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே கூறுகையில், ‘இன்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்த மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மனிதாபிமான முறையில், உயிர்களை காப்பாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் எந்த உயிர்பலியும் ஏற்படக் கூடாது. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் விலை மதிக்க முடியாதது.
வெளியுறவுக் கொள்கையில் இலங்கை தொடர்ந்து நடுநிலை வகிக்கும். மேற்காசியாவில் நிலவும் போர் காரணமாக உலகப் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, அமைதியை நிலைநாட்டு அனைத்து தரப்பும் முன் வரவேண்டும்,’ இவ்வாறு அவர் கூறினார்.
