டெஹ்ரான்: கடந்த மாதம் ஈரானின் நாடு தழுவிய போராட்டங்கள் மீதான அடக்குமுறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்னும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேற்காசிய நாடான ஈரானில், பொருளாதார நெருக்கடி, ஊழல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் முதல் போராட்டங்கள் வெடித்தன. பதிலுக்கு அரசு தரப்பு துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டுகள், கைது நடவடிக்கைகள் என கொடூரமான அடக்குமுறையை ஏவியதாக மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.
அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரினார்.
ஏற்கனவே, மேற்காசிய நாடுகளான ஈரான், இஸ்ரேல் இடையே அணுசக்தி பயன்பாடு தொடர்பாக நீண்ட காலமாக மோதல் உள்ளது. அதேபோல், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கு இடையேயும் மோதல் உள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
