டெஹ்ரான்: ஈரானில் எண்ணெய் கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கிடங்குகள் பற்றி எரிவதால் டெஹ்ரான் நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் கரும்புகை பரவி வருகிறது.
ஈரானை கைப்பற்றிவிட வேண்டும் என்ற பிரம்ம பிரயத்தனத்துடன் அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இஸ்ரேல் தம் பங்குக்கு ஈரான் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த போர் எப்போது முடியும் என்று உறுதியாக கூற முடியாத பட்சத்தில், ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளை இஸ்ரேல் குறி வைக்க ஆரம்பித்து இருக்கிறது. அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளை கண்டறிந்து அதன் மீது குண்டுமழையை பொழிந்து வருகிறது.
எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை மட்டுமல்லாது, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் இஸ்ரேல் விட்டுவைக்கவில்லை. இஸ்ரேலின் இந்த தொடர் தாக்குதல்கள் எதிரொலியாக, டெஹ்ரானில் கடும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. டெஹ்ரானின் தெற்கு பகுதியில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகம் அருகே உள்ள கிடங்கு தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடந்திருந்தாலும் சுத்திகரிப்பு நிலையம் சேதம் அடையவில்லை என்று ஈரான் அரசு ஊடகம் கூறி உள்ளது. இதேபோல வடமேற்கு டெஹ்ரானில் உள்ள கிடங்கும் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது.
இந்த தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. போரானது 2வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் முதல்முறையாக ஈரானின் எரிபொருள் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்களினால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்கனவே அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தற்போது எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது இஸ்ரேல் கவனத்தை திருப்பி தாக்கி வருவதால், உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
