ஈரான் மீதான தனது தாக்குதல்களை தற்போது நிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்று, அரசியல் தலைமையின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“அரசியல் தலைமையின் அறிவுறுத்தல்களின்படி, ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் எந்தவொரு மீறலுக்கும் தற்காப்பு ரீதியாக பதிலடி கொடுக்க முழுமையாகத் தயாராக உள்ளது.
ஈரானின் ஏவுகணைத் திறன்களைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில், அதன் ஏவுகணை தளங்கள் மற்றும் ஏவுபொறிகளைக் குறிவைத்து நேற்றிரவு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அதே நேரத்தில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தரைவழித் தாக்குதல்களை ஐடிஎஃப் தொடர்ந்து நடத்தி வருகிறது.” என தெரிவித்துள்ளது.
