ஈரானுக்கு 15 நாள் கெடு விதித்தார் டிரம்ப்; மோசமான விளைவுகள் காத்திருப்பதாக எச்சரிக்கை

வாஷிங்டன்: ‘அணுசக்தி திட்டம் குறித்து ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், ஈரானுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், 15 நாட்கள் கெடு விதித்துள்ளார்.

பொருளாதார தடை

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே, கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் முதல்முறையாக பதவி ஏற்றபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.

‘இந்த ஒப்பந்தத்தால் எந்த பயனும் இல்லை’ என, அறிவித்ததுடன், ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதித்தார். இந்நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட டிரம்ப், ஈரானுடன் மீண்டும் கூடுதல் நிபந்தனைகளுடன் கூடிய அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள முயன்று வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில், காசா அமைதி வாரியத்தின் முதல் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற டிரம்ப், ஈரான் குறித்து பேசியதாவது: ஈரான் அணுசக்தி திட்டம் கு றித்த பேச்சு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இதை ஈரான் அர்த்தமுள்ளதாக்க வேண்டுமெனில், இதற்கான ஒப்பந்தத்தை விரைந்து எட்ட வேண்டியது அவசியம். இல்லையென்றால், மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும்.

கடந்தாண்டு ஜூனில் நடத்தப்பட்ட அமெரிக்க வான் வழி தாக்குதலில், ஈரானின் அணு சக்தி திறன் அழிக்கப்பட்டுவிட்டது. இதை ஒரு படி மேலே கொண்டு செல்வதும், செல்லாமல் இருப்பதும் ஈரான் முடிவை பொறுத்தது. அடுத்த 10 நாட்களில் இது பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். அணு சக்தி ஒப்பந்தத்தை எட்ட 10 முதல் 15 நாட்கள் போதுமான அவகாசம். இதுவே அதிகபட்சம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தற்காப்பு

இதைத்தொடர்ந்து, ஐ.நா., பொதுச்செயலர் அண்டானியோ குட்டரெசுக்கு ஈரான் அனுப்பியுள்ள கடிதத்தில், தாங்கள் எந்த போரையும் துவங்க மாட்டோம் என்றும், ஆனால், ராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளானால், தற்காப்பு உரிமையை பயன்படுத்தி, ஈரான் பதிலடி கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓமன் கடற்பகுதியில் நடந்த ஈரானிய கடற்படை பயிற்சியில், ரஷ்யாவின் போர் கப்பல் ஒன்றும் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Source link