வாஷிங்டன்: ‘ஈரானை தாக்குவது அதிபர் டிரம்பின் நோக்கமல்ல. எந்த நாடாக இருந்தாலும் ராஜதந்திர நடவடிக்கைகளே அவரது முதல் விருப்பமாக இருக்கிறது,’ அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது; ஈரான் மீது தாக்குதல் நடத்த பல காரணங்களை கூற முடியும். அதிபர் டிரம்ப் ஆபரேஷன் மிட்நைட் மூலம் ஈரானின் அணுசக்தி நிலையங்களை வெற்றிகரமாக தாக்கி அழித்தார். ஆனால், எந்த நாடாக இருந்தாலும், அனைத்திற்கும் முன்பாக, ராஜதந்திர நடவடிக்கைகளே அதிபர் டிரம்புக்கு முதல் விருப்பமாக இருக்கும். அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்வது ஈரானின் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்.
நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதைப் போல, பேச்சுவார்த்தையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சில விஷயங்களில் இன்னும் இருநாடுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. அடுத்த சில வாரங்களில் ஈரானிடமிருந்து கூடுதல் விவரங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதிபர் டிரம்ப் இந்த நகர்வுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்.
கியூபா ஒரு சுதந்திரமான, வளமான ஜனநாயக நாடாக மாறுவது அமெரிக்காவின் நலனுக்கு உகந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தற்போது அங்கு நிலைமை சரியில்லை. கியூபா சரிவை சந்தித்து வருகிறது.
காசாவை மறுசீரமைப்பது என்ற அதிபர் டிரம்பின் இலக்கைப் பார்த்து ஆரம்பத்தில் ஊடகங்கள் வியப்படைந்தன. ஆனால், தற்போது அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து வருகின்றன. நாளை நடக்கும் கூட்டத்தில் அமைதி வாரியத்தில் இடம்பெற்றுள்ள 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்கின்றன. எந்தெந்த நாடுகள் எவ்வளவு நிதி வழங்குகின்றன, எந்த நாடுகள் பாதுகாப்புப் படைகளை வழங்குகின்றன என்ற பட்டியலை வெளியிடுவோம்., இவ்வாறு அவர் கூறினார்.
